டெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் 26 பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் மூடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கௌட் என்ற சமூக ஆர்வலர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கி தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 26 பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த 3,400 கிளைகள் மூடப்பட்டோ, ஒருங்கிணைக்கப்பட்டோ உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
நிதி ஆண்டு | வங்கிகள் |
2014-15 | 90 |
2015-16 | 126 |
2016-17 | 253 |
2017-18 | 2083 |
2018-19 | 875 |
பாதிக்கப்பட்ட 3,400 வங்கிக் கிளைகளில் 2,568 கிளைகள் (அதாவது 75 சதவீதம்) நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான 'ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியா' (SBI)-வை சேர்ந்தது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும், 'பாரதிய மகிளா பேங்', 'ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகனர் மற்றும் ஜெய்பூர்', 'ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதரபாத்', 'ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர்', 'ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா', 'ஸ்டேட் பேங்க் ஆஃப் திரவான்கோர்' ஆகிய பொதுத்துறை வங்கிகள் 2018 ஏப்ரல் 1ஆம் தேதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதேபோன்று, 'விஜயா பேங்க்', 'தீனா பேங்க்' ஆகிய வங்கிகள் 'பேங் ஆஃப் பரோடா' வங்கியுடன் அதே தினம் இணைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மந்தநிலை, வாராக் கடன் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, 10 மாநில பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைக்கப்போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அனைத்து இந்திய பொதுத்துறை வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், "அரசாங்கத்தின் இந்தச் செயலால் கிட்டத்தட்ட ஏழு ஆயிரம் பொதுத் துறை வங்கிக் கிளைகள் பாதிப்புக்குள்ளாகும்" எனத் தெரிவித்தார். மேலும், வங்கி இணைப்பு செயல் பொதுத்துறை வங்கிகளின் வணிகத்தை குறைத்துவிடும் என அவர் எச்சரித்துள்ளார்
எனினும், பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை பயனுள்ளதாக அமையும் என பொருளாதார நிபுணர் ஜெயந்திலால் பந்தாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். "மிகப் பெரிய பொதுத்துறை வங்கிளால் பொதுமக்களுக்கு அதிகளவில் கடன் வழங்க முடியும். இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்யும்" என கூறியிருக்கிறார்.