கோவிட்-19 பெருந்தொற்று இந்தியா தனது வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் காலகட்டத்தில் இந்தியாவின் ஜிடிபி 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான புள்ளியைத் தொட்டது. இந்த இக்கட்டான சூழலில்தான் கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்க லாக்டவுன் அறிவிப்பு வெளியானது.
இதன் பிறகு, தொழில், வர்த்தகம், வேளாண்மை, நிதிச்சந்தை உள்ளிட்ட அனைத்து தொழில்களும் கடும் பாதிப்பை சந்தித்தன. அதைத்தொடர்ந்து வந்த 2020 ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் பூஜ்ஜியத்துக்கும் கீழ் சென்று 23.9 விழுக்காடு சுருக்கத்தைச் சந்தித்தது. செப்டம்பரில் அது மெல்ல சீரடைந்து 7.5 விழுக்காடு சுருக்கத்தை கண்டாலும், தொடர்ந்து இரு காலாண்டு நெகட்டிவ் வளர்ச்சி குறியீடு என்பது நாட்டில் மந்தநிலையை தெளிவாக உணர்த்துகிறது.
கடந்த ஜனவரி மாதம் இந்தியா தனது முதல் கோவிட்-19 பாதிப்பை கேரளாவில் கண்ட நிலையில், இன்று நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. இந்த பெருந்தொற்று பொருளாதாரத்தின் முக்கிய தூண்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
உற்பத்தித்துறை
லாக்டவுன் காரணமாக பெரும் பாதிப்பைச் சந்தித்த துறையாக உற்பத்தித்துறை கருதப்படுகிறது. இந்தத் துறை முதல் காலாண்டில் 39.3 விழுக்காடு சுருக்கத்தை கண்டது. உற்பத்தி கடும் முடக்கத்தை கண்டு, அதன் காரணமாக வர்த்தகச் சங்கிலி பாதிப்பிற்குள்ளான நிலையில், ஜூலை மாதத்தில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
பின்னர் தற்சார்பு இந்தியா போன்ற திட்டங்களலால் செப்டம்பர் காலாண்டில் உற்பத்தி 0.6 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் விதமாக 10 முக்கிய துறைகள் அடையாளம் காணப்பட்டு, அதற்கு சிறப்பு நிதியுதவி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும் சர்வதேச சந்தையுடன் இந்திய சந்தையை தரம் உயர்த்த பிரதமர் மோடி 'வோக்கல் பார் லேக்கல்' என்ற முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.
வேளாண் துறை
லாக்டவுன் காரணமாக நாட்டின் பொருளாதாரமே முடங்கிய நிலையில், நிம்மதித் தரும் ஒரே அம்சமாக இருந்தது வேளாண்மைத்துறை மட்டுமே. ஜூன் 2020 காலாண்டில் வளர்ச்சியைக் கண்ட ஒரே துறை வேளாண் துறை மட்டுமே. செப்டம்பர் காலாண்டிலும் அதன் உயர்வு தொடர்ந்தது.
முதல்கட்டத்தில் நகர்புறங்களில் மட்டுமே கோவிட்-19 பரவல் கானப்பட்ட நிலையில், பலர் தங்கள் சொந்த ஊருக்கு மீண்டு செல்லத்தொடங்கியதால், வேளாண்துறையில் அதிக முதலீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக வேளாண்துறை உயர்வைக் கண்டிருந்தாலும், விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கு ஏற்ப லாபத்தை அடைய முடியவில்லை. இதை சீர்செய்து விவசாயிகளுக்கான வர்த்தக நடைமுறையை மேம்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
லாக்டவுனின் தாக்கம் வேலைவாய்ப்பில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றே. சி.எம்.ஐ.இ அமைப்பின் ஆய்வின்படி, லாக்டவுன் அறிவிக்கப்பட்ட தொடக்க காலங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டின் வேலையின்மை 23.5 விழுக்காடாக உச்சம் தொட்டது.
ஜூன் மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் 11 விழுக்காடாக சரிந்த நிலையில், நவம்பரில் 6.5 விழுக்காடாக குறைந்தது. இந்த மீட்சி ஆரோக்கியமான தோற்றத்தை அளித்தாலும், 2019ஆம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் நடப்பாண்டு வேலையிண்மை எண்ணிக்கை கூடுதலாகக் கானப்படுகிறது.
பணவீக்க விகிதம்
இந்திய பொருளாதாரம் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பணவீக்கத்தைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக உணவுப் பொருட்கள் விலை உயர்ந்து கானப்படுகிறது. லாக்டவுன் காராணமாக வர்த்தக சங்கிலி பாதிப்பைச் சந்தித்தது. இதையடுத்து உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால் நாடு முழுவதும் சில்லறை வர்த்தகம் விலை உயர்வைக் கண்டது.
ரிசர்வ் வங்கியின் அளவுகோலின்படி, நாட்டின் பணவீக்க விகிதம் 6 விழுக்காட்டிற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் 2020ஆம் ஆண்டில் ஏப்ரல் மாத காலத்தில் 7.2 விழுக்காடாக இருந்த பண வீக்க விகிதம், நவம்பரில் 6.93 விழுக்காடாக இருந்தது.
பொருளாதாரத்தின் தோற்றம்
ஆரம்பகாலத்தில் மிக மோசமான நிலையை இந்திய பொருளாதாரம் எதிர்கொள்ளும் என எதிர்பார்த்துவந்த நிலையில், லாக்டவுன் தளர்வுக்குப் பின் நம்பிக்கை அளிக்கும் விதமாக மீட்சியை இந்தியப் பொருளாதாரம் கண்டுள்ளது.
ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டு ஜிடிபி புள்ளிவிவரத்தை முதலில் -9.5 விழுக்காடாக கணித்திருந்த நிலையில், தற்போது அதை மேம்படுத்தி -7.5 விழுக்காடாக மாற்றி கணித்துள்ளது. நாட்டின் நகர்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் தேவை அதிகரித்ததால் இரண்டாவது காலாண்டில் ஏற்பட்ட மீட்சியே இந்த நம்பிக்கையான சூழலுக்கு காரணம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான கைப்பேசிகள்!