இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (Society of Indian Automobile Manufacturers) புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான ஆட்டோமொபைல் விற்பனை விவரம் குறித்த அந்த அறிக்கையில் அனைத்து ரக ஆட்டோமொபைல் வாகனங்களின் விற்பனை விவரம் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாத விற்பனையை ஒப்பிடும் போது நடப்பாண்டில் விற்பனை அளவானது 12.76 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 லட்சத்து 94 ஆயிரத்து 345 வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் 21 லட்சத்து 76 ஆயிரத்து 136 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் 14.43 சதவிகிதம் சரிவையும், கார்கள் 6.34 சதவிகித சரிவையும் சந்தித்துள்ளன. வணிக வாகனங்கள் விற்பனையானது 23.31 சதவிகித சரிவைச் சந்தித்துள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கடந்த மாதம் பண்டிகைக் காலம் என்பதால் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை பல்வேறு நிறுவனங்கள் அறிவித்திருந்தன. இதன் காரணமாக விற்பனை அதிகரித்து வியாபாரத்தில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்டது. மேற்கண்ட புள்ளிவிவரம் பொருளாதார மந்தநிலையின் தாக்கத்திலிருந்த இந்தியச் சந்தைகள் மீளவில்லை என்ற அதிர்ச்சிக்குரிய உண்மையை தெரிவித்துள்ளதாகப் பொருளாதார நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'இந்தியப் பொருளாதாரம் சோதனையில் உள்ளது' - நிர்மலா சீதாராமன் ஒப்புதல்