ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கை குழு, நாளை முக்கிய வட்டி விகிதங்களை அறிவிக்கவுள்ளது.
'ரெப்போ ரேட்' (Repo Rate) என்று அழைக்கப்படும் வங்கிகளுக்கான குறைந்த கால வட்டி விகிதம் மேலும் 0.25 விழுக்காடு வரை குறைக்கப்படும் என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் வீடு, வாகனம், தொழில் என அனைத்து வித கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வங்கிகளுக்கான குறைந்த கால வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது. நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருப்பதைக் கருத்தில்கொண்டு நடப்பாண்டில் நான்கு முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1.10 விழுக்காடு வரை வட்டி விதிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத நடவடிக்கையாக வட்டி விகிதம் 0.35 விழுக்காடு குறைக்கப்பட்டது.
நாளைய தினம் ரிசர்வ் வங்கி கால் விழுக்காடு அளவுக்கு (25 புள்ளிகள்) வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் 5 சதவிகிதத்தைத் தொடும் வகையில் டிசம்பர் மாதமும் 0.15 விழுக்காடு வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு சில பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். சக்திகாந்த தாஸ் உரையில் அதற்கான சமிக்ஞைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் ஏற்ற-இறக்கங்களைச் சந்திக்கும் தங்கம் விலை!
இதுதவிர வங்கிகள் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்புத் தொகை குறித்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான குருமூர்த்தி, "ரிசர்வ் வங்கி, வங்கிகளை ஏராளமான பணத்தை கையிருப்பாக வைத்திருக்கச் சொல்வதாகவும் இது குறைக்கப்பட வேண்டும்" என்றும் கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி முன்பு பல முறை வட்டி குறைப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அதன் பலனை வங்கிகள் மக்களுக்கு வழங்குவதில்லை என நீண்ட நாட்களாகப் புகார் கூறப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் ஓன்றாம் தேதி முதல் வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை ரெப்போ வட்டி விகிதம் அல்லது குறுகிய கால அரசு கடன் பத்திரங்களுடன் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த முறை வட்டி குறைப்புப் பலன்கள் உடனடியாக மக்களைச் சென்று சேரும் என வங்கித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டின் ஜிடிபி வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவடைந்தது.
இதனைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி வெகுவாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும், மக்கள் கையில் போதிய அளவுக்கு பணமில்லாததால் நாட்டில் தேவை குறைந்துள்ளதாகவும், இதனை சீராக்கினால்தான் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல முடியும் எனவும் கூறும் பொருளாதார நிபுணர்கள் அரசு இதனை செய்யத் தவறியதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஜிடிபி' வளர்ச்சிக்கான குறியீடா?