நாட்டின் விலைவாசி உயர்வைக் கணக்கிடுவதற்கு பணவீக்கம் அளவுகோலாகக் கருதப்படுகிறது. பணவீக்கம் உயர்வை சந்தித்தால் நாட்டின் சில்லறைப் பொருட்கள், உணவுப்பொருட்களின் விலையானது கணிசமாக உயர்வைச் சந்திக்கும் என உணர்ந்துகொள்ளலாம்.
இந்நிலையில் தேசிய புள்ளியியல் ஆணையம் பணவீக்க விகிதம் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் பணவீக்க விகிதம் கணிசமாக உயர்வை சந்தித்துள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த மே மாதத்தை ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில், நாட்டின் சில்லறை பணவீக்க விகிதம் 3.05 விழுக்காட்டிலிருந்து 3.18 விழுக்காடாகவும், உணவு பணவீக்க விகிதம் 1.83 விழுக்காட்டிலிருந்து 2.17 விழுக்காடாகவும் உயர்வை சந்தித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்தே பணவீக்க விகிதத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.