நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் விமானப் போக்குவரத்து எரிபொருளின் நுகர்வு 18 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது என அதிகாரப்பூர்வ புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.
இதுதொடர்பான புள்ளி விவர தகவல்கள் வியாழக்கிழமை (ஏப்ரல்9) வெளியானது. அதில், “தேசிய அளவிலான முடக்கம் காரணமாக பொருளாதார செயல்கள் மற்றும் போக்குவரத்து முடங்கியுள்ளது. அந்த வகையில் மார்ச் மாதத்தில் தேவை குறைவு காரணமாக பெட்ரோல் நுகர்வு 17.79 விழுக்காடு சரிந்து 16.08 மில்லியன் டன்னாக உள்ளது. விமானங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் நுகர்வும் வீழ்ச்சியடைந்துள்ளது.
டீசல் நுகர்வு 24.23 விழுக்காடு குறைந்து 5.65 மில்லியன் டன்னாக உள்ளது. நாட்டிலேயே இவ்வளவு குறைவாக டீசல் நுகர்வு இருந்ததே கிடையாது. ஆகவே இது மிகப்பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல், ஹெச்.பி.சி.எல். நிறுவனங்களின் வருவாயும் பெரிதும் சரிந்துள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.556.2 கோடியும், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு இரண்டாயிரத்து 376 கோடியும் நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுக்க 21 நாள்கள் பூட்டுதல் (லாக்டவுன்) அமலில் உள்ளது. இதனால் பெரும்பாலான கார்கள், வாகனங்கள் வீட்டில் முடங்கியுள்ளன. இதன் காரணமாக கடந்த மாதத்தில் பெட்ரோல் விற்பனை 16.37 விழுக்காடு வீழ்ச்சியடைந்து 2.15 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.