மும்பை: மத்திய அரசு நாளை (ஏப்ரல் 1) முதல் சிறுசேமிப்புகளுக்கான வட்டிவிகிதத்தைக் குறைத்து அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் சேமிப்பிற்கான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, “வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பொது வருங்கால வைப்பு நிதியின் (பிபிஎஃப்) வட்டி விகிதம் 7.1 விழுக்காட்டிலிருந்து 6.4 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. முறையே மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு வட்டி விகிதம் 7.4 விழுக்காட்டிலிருந்து 6.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர வருவாய் திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.6 விழுக்காட்டிலிருந்து 5.7 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு ஏப்ரல் 1, 2021 முதல் ஜூன் 30, 2021 வரை நடைமுறையில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் வட்டி விகித குறைப்பு பொதுமக்களின் சேமிப்புத் திறனை பெருமளவில் குறைக்கும் என்றும் சேமிப்பின் மீது பொது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அரசு சீர்குலைத்து விடக்கூடாது எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.