கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளிடம் பெறும் கடனை வட்டியுடன் 90 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும், தவறினால் வாராக் கடன்களாகக் கருதப்படும். மேலும், வாராக்கடன் பிரச்னை குறித்து தீர்வு காண 180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. அதிகபட்ச நாட்களுக்குள் தீர்வு எட்டாதபட்சத்தில் திவால் சட்டம் மூலம் நிறுவனங்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆண்டுதோறும் வாராக் கடன் அதிரகரித்த வண்ணம் உள்ளதால், திவால் சட்டத்தில் புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரச்னை குறித்து நிறுவனங்கள் தீர்வு காண இருந்த அவகாசம் 270 நாட்களிலிருந்து 360 நாட்களாக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் ஆறு சட்டத் திருத்தங்களுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
2016ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட புதிய திவால் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் நிறுவனங்கள், சிறப்பு தீர்ப்பாயங்களின் முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றன. இதன்மூலம் வங்கிகளால் நிறுவனங்களின் மீது உரியக் காலங்களில் நடவடிக்கை எடுக்கமுடிவதில்லை. இதுபோன்ற பிரச்னைகளை களைந்து உரிய நேரத்தில் நடவடிக்கைகளை எடுக்க இந்த சட்டத் திருத்தம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது