நலிந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் முக்கிய அம்சமாக தனியார்மயக்கொள்கை முடிவைத் தீவிரப்படுத்திவருகிறது. மேலும், நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களை முற்றிலுமாகவோ அல்லது பங்குகள் மூலமாகவோ தனியார்மயமாக்கும் முடிவையும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது.
உதாரணமாக, பொதுத் துறை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அமைச்சரவை ஈடுபட்டுவருகிறது. அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் தனியார்மயத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்போவதாகவும் மத்திய நிதியமைச்சக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஊக்கமளிக்கும் வகையில், பொதுத் துறை நிறுவனத்தில் அரசின் பங்குகளை 51 சதவிகிதத்திற்கும் கீழ் குறைக்க மத்திய அரசு பரிசீலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தனியார்மயமாக்கலுக்குத் தடையாக உள்ள சில சட்ட, நடைமுறை சிக்கல்கள் தவிர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது. சி.வி.சி. எனப்படும் மத்திய கண்காணிப்பு ஆணையம், சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தலைமை கணக்கு தணிக்கைக் குழு ஆகியவைகளின் அனுமதிக்குக் காத்திருக்கத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நஷ்டத்தில் இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களுக்கே தவிர, அனைத்து பொதுத் துறை நிறுவனங்களுக்கும் அல்ல என்ற விளக்கத்தையும் மத்திய நிதித்துறை வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
இதையும் படிங்க: தனிநபர் வருமான வரி குறைக்க வரிவிதிப்பு ஆணையம் பரிந்துரை