பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க, அவற்றின் பங்குகளை விற்க மத்திய அரசு சில ஆண்டுகளகவே மிகவும் தீவிரம் காட்டிவருகிறது. குறிப்பாக நஷ்டத்தில் இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களை அரசின் பிடிகளிலிருந்து கழற்றிவிட்டு தனியாரிடம் ஒப்படைக்கத் தொடங்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க திட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
நடப்பாண்டில் மட்டும் தனியார்மயமாக்கல், பங்குகளை விற்றல் போன்ற நடவடிக்கை மூலம் 1.05 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் முதலீடும் மற்றும் பொதுத் துறை சொத்துகள் மேலாண்மை துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், தனியார்மயமாக்கலின் மூலமாக நடப்பு நிதியாண்டில் தற்போதுவரை சுமார் 12,357.49 கோடி ரூபாய் அளவிற்கு அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த எட்டு மாதங்களில் 92,642 கோடி ரூபாய் தனியார்மயம் மூலம் திரட்ட அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக பத்து பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு செயல்திட்டம் தீட்டிவருகிறது என முதலீடும் மற்றும் பொதுத் துறை சொத்துகள் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.