2019ஆம் ஆண்டு அக்டோபர் - ஜனவரி மாத காலக்கட்டத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தர வேண்டிய இழப்பீடுத் தொகையான 48 ஆயிரம் கோடி ரூபாயை ஜிஎஸ்டி விதிமுறைகளுக்கு எதிராக இதுவரை தராமல் காலம் தாழ்த்திவருகிறது.
ஜிஎஸ்டி இழப்பீடு சட்டத்தின்படி, கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்குப்பின் ஆண்டு வரி வளர்ச்சியை 14 விழுக்காட்டுக்கு மேல் பெறாத மாநிலங்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகள் மத்திய அரசு முழு இழப்பீட்டுத் தொகையைத் தர வேண்டும்.
அதன்படி, 2015-16, அடிப்படை ஆண்டாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்தின் மாத வரிவருவாய் மூலம் இழப்பீட்டுத் தொகை அளவானது கணக்கிடப்படும்.
அதன்படி கடந்த அக்டோபர் - நவம்பர் மாத காலக்கட்டத்தில் மாநிலங்களுக்குத் தர வேண்டிய 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ளது என ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.
மேலும் டிசம்பர் - ஜனவரி மாத நிலுவைத் தொகையான 34 ஆயிரம் கோடியையும் சேர்த்தால் அக்டோபர் - ஜனவரி காலக்கட்ட நிலுவைத் தொகை மொத்தம் 48 ஆயிரம் கோடி ரூபாய் மாநில கணக்கில் பாக்கி உள்ளது.
ஜிஎஸ்டி சட்டம் 2017இல் உள்ள 7(2) பிரிவின்படி, இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு மாநில அரசுக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிட்டு வழங்க வேண்டும். ஆண்டு இழப்பீட்டுத் தொகையை மத்திய கணக்காயர் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து இறுதியாக வெளியிடுவார். உதாரணமாக ஏப்ரல் - மே மாத மாநில நிலுவைத் தொகையை ஜூன் மாதத்தில் கணக்கிட்டு அம்மாத இறுதிக்குள் வழங்கப்பட வேண்டும். இதே விதிமுறை அடுத்தடுத்த மாதங்களில் பின்பற்றப்பட வேண்டும்.
எனவே அனைத்து மாநில அரசுகளுக்கான 2019ஆம் ஆண்டு அக்டோபர் தொடங்கி 2020ஆண்டு பிப்ரவரி கால கட்டத்திற்காக நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்.
அத்துடன் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, கடந்தாண்டு ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் மாநில அரசுகளுக்கு 81 ஆயிரத்து 43 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்படி மேற்கொண்ட காலகட்டத்திலும் மாநில அரசுகளுக்கான நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை.
தற்போது 2020 மார்ச் மாதம் வந்துள்ள நிலையில் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தின் மொத்த நிலுவைத் தொகையை சுமார் 48 ஆயிரம் கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உடனடியாக வழங்க வழி வகைசெய்து 2019-20 நிதியாண்டின் இறுதி இரண்டு மாத நிலுவைத் தொகையையும் உடனடியாக கணக்கிட வேண்டும் என்பதே மாநில அரசின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: கேரள நிதி நிறுவனம் சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் கடன்!