உலக வங்கி அளிக்கு நம்பிக்கை:
தொழில் செய்வதற்கான உகந்த நாடுகள் குறித்து உலக வங்கி அன்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தியா நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 190 நாடுகள் கொண்ட பட்டியலில் 14 இடங்கள் முன்னேற்றம் கண்ட இந்தியா, 63ஆவது இடத்தில் தற்போது உள்ளது. தொழில் தொடங்க ஏதுவான விதிமுறைகள், கட்டுமான நடவடிக்கைக்கு உகந்த சூழல், மின்சார தன்னிறைவு, வரி விதிப்பு நடவடிக்கை, அயல்நாட்டு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அளிவீடுகளைக் கொண்டு இந்த புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ள பத்து நாடுகள் பட்டியலில் சௌதி அரேபியா, ஜோர்டான், டோகோ, பஹ்ரைன், தஜிகிஸ்தான், பாகிஸ்தான், குவைத், நைஜீரியா, சீனா, இந்தியா ஆகியவை இடம்பிடித்துள்ளன. சீனாவை விட சிறப்பாக செயல்பட்டுவரும் இந்தியா , தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த எழுச்சியைக் கண்டுள்ளது. முன்னணியில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தையும், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும், ஹாங்காங் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
இந்தியா பெற்றுள்ள இந்த வளர்ச்சிக்கு திவால் சட்ட சீர்திருத்தம், மேக் இந்தியா திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சர்வதேச நிதியம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகள் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி குறித்து குறைவான மதிப்பீடுகளை அளித்தன. இந்நிலையில் உலக வங்கியின் இந்த அறிக்கையானது ஊக்கமளிக்கும் அம்சமாகக் கருதப்படுகிறது. அத்துடன், உலக நாடுகளைக் கொண்டு இந்தியாவின் வளர்ச்சியை ஆய்வு செய்ய வேண்டிய காலமும் இதுவாகும்.
முன்னேற்றத்தின் பின்னணி:
இந்திய பொருளாதாரத்தின் குறிப்பிடத் தகுந்த மாற்றம் நரசிம் ராவ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் பலனாகவே நிகழந்தது. தொடர்ச்சியாக முன்னேற்றத்தைக் கண்டுவந்த இந்தியா, 2006ஆம் ஆண்டு 116ஆவது இடத்தில் இருந்தது. அடுத்த எட்டாண்டுகளில் முன்னேற்றத்திலிருந்து வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கிய இந்தியா, 2014ஆம் ஆண்டு 26 இடங்கள் சரிந்து 142ஆவது இடத்துக்குச் சென்றது.
இந்த பின்னடைவு குறித்து உலக வங்கி, 'இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வளர்ச்சிகான நோக்கில் செயல்படாததால் ஆப்ரிக்க நாடுகளான ரவான்டா, அங்கோலா ஆகியவற்றை விட பின்தங்கிய வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளாதாகக் கூறி கடுமையாகச் சாடியது. 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்த பின்னர் ஐந்தாண்டுகளில் சிறப்பான முன்னற்றத்தைக் காணத் தொடங்கிய இந்தியா 142ஆவது இடத்திலிருந்து 79ஆவது இடத்துக்கு முன்னேறியது. மத்தியில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் கொண்டுவந்த சீர்திருத்த நடவடிக்கைகளான சரக்கு மற்றம் சேவை வரி, வரிவிதிப்புகளில் மாற்றம், அந்நிய முதலீடு நடவடிக்கையில் சீர்திருத்தம் போன்றவை பின்னடைவுகளை களைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மாநில அரசுகளின் பங்கு:
உலக வங்கி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நியூசிலாந்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகளை அரை நாளிலேயே முடித்துவிடும் அளவிற்கு சட்டங்கள் எளிமையாக உள்ளது. சிங்கப்பூரில் ஏற்றுமதிக்கான உரிமம் பெற சராசரியாக 10 மணிநேரமே தேவைப்படுகிறது. அதேவேளை இந்தியாவில் கட்டுமான உரிமம் பெற சரிசரியாக 106 நாட்கள் தேவைபடுகிறது. சொத்து பதிவிற்கு 58 நாட்களும், புதிய மின்னிணைப்பைப் பெற 53 நாட்களும் தேவைப்படுகிறது. சார்நிலை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு முடிவுக்கு வர சராசரியாக ஆயிரத்து 445 நாட்கள் தேவைப்படுகிறது.
இந்தியாவின் அமைப்புகளில் புரையோடிப்போன ஊழலே இந்த மோசமான நிலைக்கு காரணம் என்பது நிதர்சமான உண்மை. போர்ப்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையும் இதை சுட்டிக்காட்டியுள்ளது. தொழில் வளர்ச்சி நடவடிக்கைக்கு மைய அரசு மட்டுமே பொறுப்பேற்க முடியாது. மாநில அரசுகளும் இதில் தலையாய பங்களிப்பை கொண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் மாநில அரசுகளின் பங்களிப்பு புறக்கணிக்கப்படும் பட்சத்தில் குடிமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவர்கள்.
இந்தியாவின் 65 சதவிகித மக்கள்தொகை 35 வயதுக்கும் குறைவாகவே உள்ளனர். இந்த மனிதவள ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது அத்தியாவசியமாகும். இதன்மூலம் அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு நான்காவது தொழில் புரட்சியின் முகமாக இந்தியாவில் திகழும். மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படும்பட்சத்தில் இந்தியாவின் கனவு பொருளாதாரம் என்பது சாத்தியமே.