2022-23ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா மின்னணு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட லேப் டாப்பில் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில், “தொடர்ந்து 2ஆவது முறையாக காகிதமில்லா மின்னணு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையில் முன்னேறிவருகிறோம். கரோனா பரவலால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருகிறது.
கரோனா பெருந்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார சரிவுகளை சரி செய்து இந்திய பொருளாதாரம் வளர்ந்துவருகிறது.
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்ந்துவருகிறது. இந்தப் பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கம் பாதிக்கப்படாத வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தினால் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்ஜெட் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், விவசாயிகள், பட்டியலின மக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கானது.
சிறு குறு நடுத்தர தொழில்களை பாதிக்கும் வகையில் வரிவிதிப்புகள் இருக்காது. மேலும் இளைஞர்கள் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார்.