மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று 2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்தார். இதனைத் தொடர்ந்து, பலதரப்பு மக்களிடையே கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதில், கடந்த ஓராண்டு காலத்தில் தங்களின் வாழ்க்கைப் பெரிய அளவில் மோசமடைந்துள்ளதாக 50.7 விழுக்காடு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 31.3 விழுக்காட்டினர் இதே பதிலை அளித்திருந்தனர். 2015ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 27.2 விழுக்காட்டினர் இதே பதிலை அளித்திருந்தனர்.
அதேபோல், 2016ஆம் ஆண்டு 31.4 விழுக்காட்டினரும் 2017ஆம் ஆண்டு 42.2 விழுக்காட்டினரும் 2019ஆம் ஆண்டு 28.7 விழுக்காட்டினரும் இதே பதிலை அளித்திருந்தனர்.
கடந்த ஓராண்டு காலமாக, கரோனா பெருந்தொற்று பலதரப்பினரின் வாழ்க்கையைப் பெரும் இன்னலுக்குள்ளாக்கிய நிலையில், 21.3 விழுக்காட்டினர் தங்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருப்பதாகத் தெரிவித்தனர். 17.3 விழுக்காட்டினர், தங்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.