டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 41ஆவது கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், இழப்பீடு வழங்குவதற்காக ஆடம்பரப் பொருள்கள் மீது கூடுதல் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. 2019 - 2020 நிதியாண்டில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
எனினும், 95 ஆயிரத்து 444 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே கூடுதல் வரி வசூலிக்கப்பட்டது.
தற்போது கரோனா நெருக்கடியால் அரசுக்கு ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது. இச்சூழலில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கியுள்ளது.
இதில், இழப்பீட்டுத் தொகைக்காக மாநிலங்கள் கடன் வாங்கிக் கொள்ள அனுமதிப்பது குறித்தும், அதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
இழப்பீட்டுக்காக கூடுதல் வரி விதிக்கப்படும் பட்டியலில் கூடுதலாக பொருள்களை சேர்க்கலாமா அல்லது கூடுதல் வரியை அதிகரிக்கலாமா என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.