சமீப காலங்களாக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தள்ளுபடிகளை அளித்து மக்களிடையே ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றன.
இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான தள்ளுபடிகள் வழங்கும் சொமாட்டோ, ஸ்விகி, ஃபுட் பாண்டா நிறுவனங்கள் தள்ளுபடிகளை நிறுத்திக்கொள்ள வேண்டுமென தேசிய உணவு ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடித்ததில், ”வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான தள்ளுபடிகள் அளிப்பதால் பாதிப்பு, கமிஷன் பிரச்சனை ஏற்படுவதாக உணவக நிர்வாகிகள் தரப்பிலிருந்து பல புகார்கள் வந்துள்ளன. ஆன்லைன் நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் தள்ளுபடிகள் அளித்தால் பிரச்னை இல்லை. ஆனால் அவர்கள் வருடம் முழுவதும் 30% முதல் 70% வரை தள்ளுபடிகளை அளிப்பதால் பிரச்னைவருகிறது என உணவு நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக பேசிய தேசிய உணவு ஆணைய தலைவர், ’தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும், ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் எதிரானவர்கள் நாங்கள் இல்லை. ஆனால் அதை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதாலேயே நாங்கள் தலையிடுகிறோம்’ என்றார்.