தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. லைசென்ஸ், அலைக்கற்றை உள்ளிட்ட ஒப்பந்தங்களைப் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருவாயில் ஒரு பகுதியை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது.
அதன்படி, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் எனப்படும் AGR (Adjusted Gross Revenue) நிலுவைத் தொகையை தொலைத்தொடர்பு துறைக்கு ஏர்டெல், வோடபோன்-ஐடியா, டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.ஜி.ஆர். தொகையை செலுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத் தீர்பை அடுத்து வோடாபோன் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் இயக்குர்கள் கூட்டம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நிறுவனத்தின் நிதி நிலைக்குறித்து ஆலோசித்து ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையை செலுத்த செயல்திட்டம் உருவாக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் தகவல்படி, மொத்தம் 58 ஆயிரத்து 254 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வோடபோன் நிறுவனம் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழி மசோதா 2020 - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!