கரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு அறிவுறுத்தின. இந்த வசதியை பிரபல சமூலவலைத்தள நிறுவனமான ட்விட்டர் நிர்வாகம் அதன் ஊழியர்களுக்கு மார்ச் 11ஆம் தேதியிலிருந்தே நடைமுறைப்படுத்தியது. இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ட்விட்டர் அலுவலகம் தற்போது திறக்கப்பட வாய்ப்பில்லை என்ற சூழல் நிலவுகிறது.
இதனால் ட்விட்டர் நிர்வாகம் தரப்பில் ஊழியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதில், ''இனி வரும் காலங்களில் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே நிரந்தரமாக பணியாற்றலாம். யாரேனும் அலுவலகம் வந்து பணியாற்ற விரும்பினால், நிச்சயம் அவர்கள் வரலாம். ஆனால் அவர்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும். கரோனா வைரசால் இன்னும் கூடுதலாக பல பாதுகாப்பு நடவடிக்கைகள் அலுவலகத்தில் செய்யப்படும். நிர்வாகம் தொடர்பான சந்திப்புகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்படுகின்றன'' என அறிவித்துள்ளது.
இதேபோன்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களை இந்த வருட இறுதிவரை வீட்டிலிருந்தே பணி செய்யமாறு அறிவுறுத்தியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் ஜூலை 6ஆம் தேதி அலுவலகம் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஜிமெயிலில் வரும் கூகுளின் Meet செயலி!