ஊரடங்கு காரணமாகப் பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளனர். கரோனா அச்சத்தால் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு ஊழியர்களை வீட்டிலிருந்து பணிசெய்யும் வாய்ப்பை அளித்துள்ளன.
அந்த வகையில், பிரபலமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனமும் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிசெய்ய வைத்துள்ளது.
ஆனால், ஊழியர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் தொழில் நுட்பக் கோளாறுகள் காரணத்தால், உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, டிசிஎஸ் நிறுவனத்தின் மென்பொருள் தயாரிக்கும் டிஜிட்டேட் நிறுவனம் 'ignio AI.Digital Workspace' என்ற சாப்ட்வேர் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இதை ஊழியர்கள் கணினியில் தரவிறக்கம் செய்வதன் மூலம் தொழில் நுட்ப பிரச்சனைகளை ஊழியர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, கண்டறிந்து சரிசெய்துவிடும். இதனால்,நிறுவனத்தின் உற்பத்தித்திறன் பெரிதளவில் அதிகரிக்கப்படும். அதே சமயம், ஐடி குழுவின் நேரமும், வேலைப் பளுவும் குறையும் எனக் கருதுகின்றனர்.
இதுகுறித்து டிஜிட்டேட் நிறுவன இயக்குநர் அகிலேஷ் திரிபாதி கூறுகையில், "தொழில்நுட்ப இடையூறுகள் காரணமாக ஒரு ஐடி ஊழியர் ஆண்டிற்கு 100 மணி நேரத்தை வீணாக இழக்கிறார். ஊழியரின் சாதனத்தில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யவும், பல்வேறு தரப்பிலிருந்து வரும் புகார்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதும் ஐடி குழுவுக்குச் சவாலாக தான் இருந்து வருகிறது. குறிப்பாக, தற்போது Work-from-home-இல் ஊழியர்களுக்கு தொழில் நுட்பக் கோளாறுகள் பெரும் பிரச்னையாக உதித்துள்ளன. ஆனால், தற்போது, அறிமுகப்படுத்தியுள்ள சாஃப்ட்வேர் மூலம் ஊழியர்களின் பிரச்னை உடனடியாக சரிசெய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்குப் பிறகு தொழிற்பேட்டை திறப்பு... தொழிலாளர்கள் இல்லை, ஆர்டர்கள் இல்லை