கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் பயணிகள் விமான சேவை முற்றிலும் நிறுத்திக்கொள்ளப்பட்டது.
சரக்கு விமானச் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு இந்திய விமான நிறுவனங்களும் சரக்கு விமானச் சேவையில் நுழைந்தது.
குறிப்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சரக்கு விமான போக்குவரத்துச் சேவையில் பல்வேறு புதிய முயற்சிகளைக் கையாண்டுவருகிறது. இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சரக்கு விமான போக்குவரத்தின் பிரிவான ஸ்பைஸ்ஏர் நிறுவனத்திற்கு ஆளில்லாத விமானம் மூலம் அத்தியாவசிய பொருள்களை டெலிவரி செய்யும் சோதனையை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுமதியளித்துள்ளது.
இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் கூறுகையில், "புதுமையான தொழில்நுட்பங்களைப் புகுத்துவதுதான் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருந்துவருகிறது. இதன்மூலம் பயணிகளுக்குச் சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
நாட்டின் கடைக்கோடி பகுதியையும் இணைக்கவும் குறைந்த விலையில் பொருள்களை வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்ப்பதற்கும் இது மிகவும் முக்கியமான ஒரு முயற்சி.
கெட்டுப்போகக் கூடிய பொருள்களையும் மருந்துகளையும் இந்தப் புதிய முறையைப் பயன்படுத்தி டெலிவரிசெய்ய ஆர்வமாக உள்ளோம்" என்றார்.
இது குறித்து ஸ்பைஸ்ஜெட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆளில்லா விமானங்கள் மூலம் முதலில் மருந்துகளையும் அத்தியாவசிய பொருள்களையும் டெலிவரி செய்யவுள்ளோம்.
ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில் விரைவாக மக்களுக்குப் பொருள்கள் சென்று சேருவது உறுதிசெய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாக மாற்றும் ஸ்பைஸ்ஜெட்