இந்தியாவின் முன்னணி விமானப்போக்குவரத்து நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ் அண்மையில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி அதன் சேவை முடக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனரான நரேஷ் கோயல் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகினார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் தொகை சுமார் 21 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உள்ள நிலையில், அந்நிறுவனத்தின் நிதியைக் கையாண்ட விதத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த மே 25ஆம் தேதி நரேஷ் கோயல் தனது மனைவியுடன் வெளிநாடு செல்லவிருந்த போது அவர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் நரேஷ் கோயல் தொடுத்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் நீதிமன்றம் நரேஷ் கோயலின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. வங்கிக் கடனுக்காக ரூ. 18 ஆயிரம் கோடிக்கான உத்தரவாதத்தைக் காட்டினால் நரேஷ் கோயலை வெளிநாடு செல்ல அனுமதிப்பதாகக் கூறியது.
மேலும், இவ்வழக்கில் தனது மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கக் கோரிய நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.