ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஓலா நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Etergo எனும் நெதர்லாந்து நிறுவனத்தை வாங்கியது. அந்நிறுவனத்தின் Etergo Appscooter மாடலை மையமாக வைத்து, சிறிய மாற்றங்களுடன் புதிய இ-ஸ்கூட்டரை தமிழ்நாட்டில் உள்ள ஓலா எலெக்ட்ரிக் தொழிற்சாலையில் தயாரித்து வந்தது.
இந்த வாகனம் சோதனை ஓட்டம் முடிந்து விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் புக்கிங் கடந்த ஜூலை 16ஆம் தேதி தொடங்கி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. புக்கிங் தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், சுமார் ஒரு லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வாகனம் எப்போது சந்தையில் விற்பனைக்கு வரும் என்ற கேள்விக்கு, தற்போது பதில் அளித்துள்ளது ஓலா நிறுவனம்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் விற்பனை
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அலுவலர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை ஆகியவை அறிமுக தேதியன்று வெளியிடப்படும் எனத் தெரிகிறது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால், 100 முதல் 150 கி.மீ., வரை பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, நாடு முழுவதும் 400 நகரங்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பிரத்யேக சார்ஜிங் மையங்களை அமைத்து வருகிறது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 1இல் அமல்., ஏடிஎம் கட்டண உயர்வு ஏன்? ரிசர்வ் வங்கி விளக்கம்