கரோனா தொற்று காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். பெரும்பாலான பொருள்கள் ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கின்றனர்.
மளிகைப் பொருள்களை டெலிவரி செய்யும் திட்டத்தில் ஜியோமார்ட் இணைந்தவுடன் போட்டி தீவிரமடைந்துள்ளது. ஊரடங்கில் காலத்தில் பல ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள், பொருள்களை விநியோகிக்க டிஜிட்டல் தளங்களுடன் கூட்டுசேர ஆர்வமாக உள்ளனர்.
அதன்படி, பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் பிளிப்கார்ட், புதிய முயற்சியாக பொருள்களை 90 நிமிடங்களில் டெலிவரி செய்யும் பிளிப்கார்ட் குயிக் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து பிளிப்கார்ட் துணைத் தலைவர் சந்தீப் கார்வா கூறுகையில், " பிளிப்கார்ட் குயிக் (உடனடி) சேவை முதற்கட்டமாக பெங்களூருவில் குறிப்பிட்ட சில இடங்களில் தொடங்கவுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.
இந்த குயிக் சேவையின் மூலம் பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள் அனைத்தும் ஆர்டர் செய்த 90 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும். இந்தப் பொருள்களை பத்திரமாக வைப்பதற்காக டெலிவரி பாய்ஸூக்கு பிரத்யேக ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த டெலிவரி திட்டத்தை ஏற்கனவே பல நிறுவனங்கள் செய்து வந்தாலும், நாங்கள் சரியான முறையில் தரமான பொருள்களை டெலிவரி முதல் நிறுவனம் நாங்களாக தான் இருப்போம். தற்போது, நிஞ்ஜாகார்ட், ஷேடோஃபாக்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். எதிர்காலத்தில், உள்ளூர் கடைகளுடன் இணைந்து தரமான பொருள்களை விரைவாக டெலிவரி செய்வோம்" எனத் தெரிவித்தார்
மேலும் அவர் கூறுகையில், "இன்று பெங்களூருவில் ஷாடோஃபாக்ஸுடன் இணைந்து பிளிப்கார்ட் குயிக் சேவையை வைட்ஃபீல்ட், பனதூர், எச்.எஸ்.ஆர் லேஅவுட், பி.டி.எம் லேஅவுட், பனஷங்கரி, கே.ஆர்.புரம் மற்றும் இந்திராநகர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தொடங்கியுள்ளோம்.
முதலாவதாக பால், இறைச்சி, மளிகை, எலக்ட்ரானிக் பொருள்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் தயாரிப்புகளை டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த சேவையானது காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும் டெலிவரி கட்டணமாக ரூபாய் 29 வசூலிக்கப்படும்" என்றார்
அமேசான், பிக்பாஸ்கெட் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் இத்திட்டத்தை வகுத்துள்ளது. முன்னதாக, பிளிப்கார்ட் உட்பட பல நிறுவனங்கள் 90 நிமிடங்கள் டெலிவரி மாடலை முயற்சி செய்தார்கள் ஆனால், எதிர்பார்த்தபடி வெற்றியடைய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.