ஹெச்-1 பி விசா
அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் திறன்சார் தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு ஹெச்-1 பி விசா எனப்படும் விசாவை வழங்குகிறது. இது அந்நாட்டில் தற்காலிகமாக தங்கிப் பணியாற்றும் உரிமையே. பொதுவாக ஹெச்-1 பி விசா மூலம் அதிக அளவில் இந்தியர்களே அந்நாட்டில் பணியமர்த்தப்படுகின்றனர். 2018ஆம் ஆண்டு ஹெச்-1 பி விசா மூலம் அந்நாட்டிற்கு சென்றவர்களில் நான்கில் மூன்று பேர் இந்தியர்களே.
அமெரிக்க வேலை கனவு
நம்மூரில் பெரும்பாலான இளைஞர்களுக்கு அமெரிக்கா சென்று பணியாற்ற வேண்டும் என்பது மிகப் பெரிய கனவு. ஆனால் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலிருந்து அந்நாட்டிற்கு வேலைக்கு செல்பவர்களால் அங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என அமெரிக்கர்கள் கருதுகின்றனர். இதனை தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக கொடுத்த டொனால்டு டிரம்ப் அந்நாட்டு அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிக்கலில் இந்திய ஐடி நிறுவனங்கள்
தற்போது ஹெச்-1 பி விசா மூலம் அமெரிக்கா செல்லபவர்கள் குறைந்து வருவது அந்நாட்டு குடியுரிமைத்துறையின் தகவலில் தெரியவந்துள்ளது. 2017-18 நிதியாண்டில் இந்திய நிறுவனங்களில் 80 சதவிகித ஹெச்-1 பி விசா மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டது காக்னிசன்ட் நிறுவனமே(Congnizant). அந்நிறுவனத்தின் 4,338 ஹெச்- 1பி விசா விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2,122 விண்ணப்பங்களும், டிசிஎஸ் நிறுவனத்தின் 1,896 விண்ணப்பங்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. முதல் ஐந்து இடத்திலிருக்கும் இந்திய டெக் நிறுவனங்களின் 11,907 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
சிக்கலில் இந்திய நிறுவனங்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ஐடி நிறுவனங்களின் ஹெச்-1 பி விசா அனுமதிக்கப்படுவது 21 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள இந்திய ஐடி நிறுவனங்கள் உள்ளூரில் வசிக்கும் அமெரிக்கர்களை பணியமர்த்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைவதுடன், அதிக ஊதியதிற்கு அமெரிக்கர்களை பணியமர்த்துவதால் அந்நிறுவனங்களுக்கு கூடுதல் செலவும் ஏற்படுகிறது.
டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்க பர்ஸ்ட் (America First) என்ற கொள்கையுடன் அந்நாட்டு அரசு செயல்படுகிறது. எல்லா வேலைவாய்ப்புகளிலும் அந்நாட்டவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 65,000 ஹெச்.1 பி விசாக்களுக்கு அமெரிக்க அரசு அனுமதியளித்து வரும் நிலையில் பட்ட மேற்படிப்பு படித்த அமெரிக்கர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் ஹெச் -1 பி விசா நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. இது இந்திய நிறுவனங்களையும், அமெரிக்கா சென்று பணியாற்றும் திறன்சார்ந்த இந்திய தொழிலாளர்களையும் பெரிய அளவில் பாதித்துள்ளது.