கரோனா வைரஸால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இச்சமயத்தில் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்க முடியாததால், ஆன்லைன் வீடியோ கால் பக்கம் திரும்பியுள்ளனர். இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் பேசி கலந்துரையாடவும், ஆசிரியர்கள் ஆன்லைனில் பாடம் கற்பிக்கவும், பிசினஸ் மீட்டிங்கிற்காகவும் ஆன்லைன் குரூப் வீடியோ கால் உபயோகிக்கின்றனர்.
சமீபத்தில் மக்கள் அதிகளவில் பயன்படுத்திய ஸும் செயலியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தற்போது மக்கள் கூகுளின் மீட் (Google Meet) செயலியை உபயோகிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், "100 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள், கல்வியாளர்கள் கூகுள் வகுப்பறையைப் (Google Classroom) பயன்படுத்துகின்றனர். இது மார்ச் மாத தொடக்கத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. குரோம் புக்ஸ்க்கான (Chromebooks) தேவை அதிகரித்துள்ளதைப் பார்க்கிறோம். மார்ச் இறுதி வாரத்தில் 400 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பள்ளிகளும், வணிகங்களும், எங்களின் மிகவும் பாதுகாப்பான வீடியோ கான்ஃபெரன்சிங் தளமான மீட் செயலியை பயன்படுத்துகின்றன. சுமாராக 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மீட் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதே போல், மார்ச் மாதத்தில் கூகுளின் செயலி யூடியூப், கூகுள் பிளேவில் மக்கள் உபயோகிக்கும் நேரம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது புதிய பொருள்களின் தேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் குறைந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: வேலை இழக்கும் ஏர்வேஸ் ஊழியர்கள்