ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, ஜான்சன் & ஜான்சன் ’NO more tears’ பேபி ஷாம்புகளை ஆய்வு செய்தது. அதில் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தும் ஃபார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருள் இருப்பதாக அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியாகின. அதுமட்டுமின்றி அதனைத் தொடர்ந்து உபயோகப்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், நிர்வாகம் தரப்பில், `ஆய்வு தெளிவாக இல்லை. நாங்கள் ஃபார்மால்டிஹைட் வேதிப்பொருள்களைச் சேர்ப்பதில்லை’ என்று மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து மார்ச் 5ஆம் தேதி ராஜஸ்தான் மருந்து தரக் கட்டுப்பாடு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், தர நிர்ணய ஆய்வில் தோல்வி அடைந்த பொருள்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் ஜான்சன் & ஜான்சன் குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் ஷாம்புவில் அபாயகரமான வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், ”கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பேபி ஷாம்பு பாட்டில்களை அகற்ற வேண்டும். ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஷாம்புவில் அஸ்பெட்டாஸ் உள்ளிட்டவை கலந்திருப்பது சோதனையில் தெரியவந்ததால் இந்த நடவடிக்கை” என கூறப்பட்டுள்ளது.