செல்போன்களில் புதிய தொழில் நுட்பத்தினால் பல மாற்றங்கள் தற்போது வந்தாலும், ஆரம்ப காலகட்டத்தில் நோக்கியா நிறுவனத்தின் செல்போன்கள் தான் அனைவரின் கைகளில் தென்படும். ஒரு காலத்தில், இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த நோக்கியா செல்போன்கள், சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் வருகையால் விற்பனையில் சரிவைக் கண்டன.
இருப்பினும், நோக்கியா தனது அடுத்த முயற்சியாக கைபேசி சந்தையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவ்வப்போது புதிய வசதிகளைப் பயனாளர்களுக்கு வழங்கிவரும் நோக்கியா, பயனாளர்களின் நீண்ட நாள் ஆசையைத் தற்போது நிறைவேற்றியுள்ளது. நோக்கியாவின் 10க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு கூகுள்ஸ் போன் செயலியில் (Googles Phone app) கால் ரெக்கார்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து நோக்கியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த கால் ரெக்கார்டிங் வசதி வேண்டுமென இந்தியாவின் நோக்கியா பயனர்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்திருந்தனர். தற்போது, 10க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு ஒன் நோக்கியா ஸ்மார்ட்போன்களில் கால் ரெக்கார்டிங் வசதி வந்துள்ளது.
இச்சேவையைப் பெறுவதற்கு பிளே ஸ்டாரில் உள்ள லேட்டஸ்ட் கூகுள் போன் செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும். தொலைபேசி அழைப்பின் போதே ரெக்கார்டு பொத்தானை கிளிக் செய்து, பதிவு செய்து கொள்ளலாம். இந்த ரெக்கார்டிங்ஸ் செல்போன் ஸ்டோரேஜில் தான் சேமித்து வைக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஏர்டெல்லுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் நஷ்டம்!