சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற டெக் நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக டிம் குக் உள்ளார்.
இந்நிலையில் தற்போது டிம் குக்கின் மொத்த சொத்து மதிப்பு முதல்முறையாக 100 கோடி டாலர்களைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் டிம் குக்கிற்கு ஊதியமாக 125 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன. தவிர ஆப்பிள் நிறுவனத்தின் 8,47,969 பங்குகளை டிம் குக் தன்வசம் வைத்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. கடந்த வாரம், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு உலகில் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ’சவூதி அரம்கோ’ நிறுவனத்தின் சந்தை மதிப்பைவிட உயர்ந்தது.
மேலும், சர்வதேச அளவில் இரண்டு டிரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பைக் கொண்ட முதல் நிறுவனமாகவும் ஆப்பிள் உருவெடுத்துள்ளது. ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் பங்குகள் 10.47 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் டிம் குக்கின் மொத்த சொத்து மதிப்பும் உயர்ந்து, தற்போது முதல் முறையாக 100 கோடி டாலர்களைக் கடந்துள்ளது.
இருப்பினும், மற்ற டெக் நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்களின் சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில், டிம் குக்கின் சொத்து மதிப்பு குறைவாகவே உள்ளது. குறிப்பாக, அமேசான் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 187 பில்லியன் டாலர்களாகவும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 121 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. அதேபோல பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவுக்கான மருந்தை கண்டுபிடித்த ரஷ்யா