ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்
ரிலையன்ஸ் நிறுவனம் கடுமையான கடன் சுமையிலும் நிதி நெருக்கடியிலும் சிக்கித் தவித்து வருகிறது. அந்நிறுவனம் சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே தனது 1500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை ரிலையன்ஸிடம் இருந்து திரும்பப் பெற்றுத்தரக் கோரி, 2017ம் ஆண்டு எரிக்சன் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை (NCLT -National Company Law Tribunal ) நாடியது. பின் இது தேசிய நிறுவன சட்ட மறு சீராய்வு தீர்ப்பாயத்திற்குச் (NCLAT- National Company Law Appellate Tribunal) சென்றது. அதன்பின் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.
முரண்டு பிடித்த அம்பானி
முதலில் செப்டம்பர் 30-க்குள் எரிக்சன் நிறுவனத்திடமிருந்து தனது கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் என ரிலையன்ஸுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை செய்யத் தவறியதும் மீண்டும் டிசம்பர் 15-க்குள் கடனைத் திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து கடனை செலுத்தாமல் இருந்ததையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் செய்தது எரிக்சன்.
குட்டு போட்ட உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கின் விசாரணையில், ரிலையன்ஸ் நிறுவனம் பணம் இருந்தும் கடனை திரும்ப செலுதாமல் உள்ளதாகவும் இன்னும் நான்கு வார காலத்திற்குள் மீதமுள்ள 460 கோடி ரூபாயை செலுத்தாவிட்டால் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி மூன்று மாதம் சிறை செல்ல நேரிடும் என்றும் கடுமையாக எச்சரித்திருந்தது உச்ச நீதிமன்றம். இந்த கெடு நாளையுடன் (மார்ச் 19) முடிவடையும் நிலையில் ரிலையன்ஸ் கடைசி நிமிடத்தில் தனது கடனை திரும்ப செலுத்தியுள்ளது. இதனை எரிக்சன் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், இரண்டு ஆண்டுகள் நீடித்த சட்ட பிரச்னை முடிவுக்கு வந்ததுடன் சிறை தண்டனையிலிருந்து அனில் அம்பானியும் தப்பியுள்ளார்.
விளிம்பில் அம்பானி
தம்பி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்புத் துறைக்குள் நுழைந்ததும் ஏர்டெல், ஐடியா, ஃவோடோபோன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்தன. இதில் அண்ணன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனமும் சரிவை சந்தித்து. ஏற்கனேவே அதிக கடன் சுமையினால் திணறி வந்த அந்நிறுவனம், இதனால் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோவிற்கு தனது தொலைத்தொடர்பு சொத்துக்களை விற்று கடனை அடைக்க அந்நிறுவனம் எடுத்த முயற்சியும் தோல்வில் முடிந்தது. கடந்த 2008ம் ஆண்டு போஃர்ப்ஸ் நிறுவம் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி 6வது இடத்தில் இருந்தார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடனை திரும்ப செலுத்தாவிட்டால் சிறை செல்லும் நிலைமைக்கு வந்துள்ளார். தவறான நிர்வாக முடிவுகளும் அதிக கடன்களுமே அம்பானியின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணங்களாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.