அன்மை காலமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி, கடந்த காலண்டிற்கான நிதி நிலவரத்தை நேற்று வெளியிட்டது. அதன்படி, கடந்த டிசம்பர் - பிப்ரவரி காலாண்டில் 18 ஆயிரத்து 654 கோடி ரூபாய் நஷ்டமடைந்ததாக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாராக்கடனும் வங்கியின் மொத்த சொத்து மதிப்பில் 18.87 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதாவது, 40 ஆயிரத்து 709 கோடி ரூபாயாக வாராக்கடன் அதிகரித்துள்ளது. முன்னதாக, செப்டம்பர் காலண்டில் வாராக்கடன் 17 ஆயிரத்து 134 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு வங்கியின் நிறுவனர் ரானா கபூர், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியின் நிதிகளை பல்வேறு நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி கடனாக வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
வங்கி நிதிநிலை மிகவும் மோசமானதால் யெஸ் வங்கி நிர்வாகத்தைத் தற்போது ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளது. யெஸ் வங்கியை மீட்டெடுக்கப் புதிய திட்டத்தை வகுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, யெஸ் வங்கியின் 49 விழுக்காடு பங்குகளை எஸ்பிஐ வாங்கவுள்ளது. அதேபோல ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகளும் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய செய்யவுள்ளது.
இந்த புதிய முதலீடுகளால் வங்கியின் நிதிச்சிக்கல் விரைவில் சீர் செய்யப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் நிதியமைச்சகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி - பங்குச் சந்தையை கையில் எடுத்த செபி!