கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக வாடிக்கையாளர்களிடம் சென்றடைந்துள்ளது. இதன் விளைவாக நாட்டின் தொலைத்தொடர்பு சந்தையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த மாற்றத்தைச் சமாளிக்கும் வகையில் இன்னும் சில மாதங்களில் பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை உயர்த்தப்போவதாக எடல்வெயிஸ் குழுமத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையில், 'இந்தியாவின் 65 விழுக்காடு கைப்பேசி வாடிக்கையாளர்கள் அகன்ற அலைவரிசை சேவையைப் பெற்றுள்ளனர். இது அபரிமிதமான வளர்ச்சியாகும். இந்த பெரும் மாற்றம் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப்பின் நிகழ்ந்துள்ளது.
நாடு முழுவதும் 40 கோடி வாடிக்கையாளர்களை உருவாக்கும் திட்டத்தை நிறைவேற்ற ஜியோ தீவிரமாக முயன்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் 40 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ எட்டிவிடும். அதன்பிறகு சேவைக்கட்டணத்தை கணிசமாக உயர்த்தலாம். ஜியோ நிறுவனத்துடன் பாரதி ஏர்டெல், வோடாபோன்-ஐடியா நிறுவனங்களும் கட்டண உயர்த்த திட்டமிட்டுள்ளன. தரமான சேவை மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்' என ஆய்வறிக்கைத் தகவல் தெரிவிக்கிறது.