ஏர் இந்தியா நிறுவனத்தை விலைக்கு வாங்க டாடா குழுமம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், கடும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மத்திய அரசு அந்நிறுவனத்தின் 76 விழுக்காடு பங்கு மூலதனத்தை தன்னிடம் வைத்துள்ளது. இந்நிலையில், இப்பங்குகளை முழுவதுமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ள மத்திய அரசு, தற்போது ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏலத்தில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளி படிவத்தினை தாக்கல் செய்வதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசாட்ஸ் என்பது ஏர் இந்தியா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒரு கூட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தரை கையாளுதல் சேவைகளை வழங்கி வருகிறது.
அதேபோல் ஏர் இந்தியா என்ஞினியரிங் சர்வீசஸ், ஏர் இந்தியா ஏர் டிரான்போர்ட் சர்வீசஸ், ஏர்லைன் அலைட் சர்வீசஸ், ஹோட்டல் கார்ப்பரேஷ் ஆஃப் இந்தியா போன்றவைகள் ஏர் இந்தியாவின் கிளை நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் அனைத்தும் ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் என்ற தனி நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
மார்ச் 2019ஆம் நிதியாண்டின் நிலவரப்படி நிறுவனத்தின் கடனானது 58 ஆயிரத்து 351 கோடி ரூபாயாக இருந்தது. இதன் விளைவாக பல்வேறு நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க முனைப்புக் காட்டினாலும், உள்நாட்டு நிறுவனமான டாடா இதனை வாங்கும் பட்சத்தில், விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.
ஏற்கனவே ஏர் ஏசியாவில் 51 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள டாடா குழுமம், ஏர் இந்தியாவை வாங்கும் பட்சத்தில், உள்நாட்டில் பெரும் பங்காற்றும் விமான சேவை நிறுவனமாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.