குறைந்த கட்டணத்துக்கு பெயரெடுத்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அடுத்த ஆண்டு (2020) தொடக்கத்தில் அமீரகத்தின் ராஸ் அல் கைமாவுக்கு (RAK) தனது விமான சேவையை தொடங்க உள்ளது.
இந்த விமானத்தின் பெயர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை நிறுவனத்தின் தலைவரும், பொது இயக்குனருமான அஜய் சிங் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, கடந்த மாதம் ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அங்கு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் விமான நிலையத்தை விமான மையமாக ராஸ் அல் கைமா மாற்ற உள்ளது. அங்கிருந்து கிழக்கு ஐரோப்பாவிற்கு விமான சேவை சாத்தியங்கள் உள்ளன” என்றார்.
ஸ்பைஸ் ஜெட், நவ.20ஆம் தேதி பஹ்ரைனின் விமானமான வளைகுடா ஏர் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு விமான நிறுவனங்களுக்கிடையில் அதிக ஒத்துழைப்பு, சரக்கு சேவைகள் ஒருங்கிணைப்பு, பொறியியல் சேவைகள் மற்றும் பைலட் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட உள்ளது.
இதேபோல் ஏப்ரல் மாதத்தில், துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடன் குறியீடு பகிர்வுக்கான ஆரம்ப ஒப்பந்தத்தில் ஸ்பைஸ்ஜெட் கையெழுத்திட்டது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சிங், “ஸ்பைஸ் ஜெட் பல சர்வதேச விமான நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. இதனால் ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவுக்கும் நேரடியாக பறக்கும் என்று அர்த்தமல்ல. நாங்கள் பயணிகளுக்கு வாய்ப்பு கொடுப்போம். அவர்களே தேர்ந்தெடுப்பார்கள். எங்கள் கூட்டாளர் விமானங்களை பயன்படுத்தி ஐரோப்பா, அமெரிக்கா என பயணிகள் பறக்கலாம்.” என்றார்.
இதையும் படிங்க: பழைய வேகத்தில் பறக்கப்போகும் ஜெட் ஏர்வேஸ்!