இந்திய ரயில்வே துறை பயணிகள் போக்குவரத்தைவிட சரக்கு போக்குவரத்தில்தான் அதிக லாபத்தை ஈட்டிவருகிறது. சரக்கு ரயில் சேவைகளை அதிகரிக்கவும் அதன் மூலம் ஈட்டும் லாபத்தை அதிகரிக்கவும் ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், அதிக கொள்ளளவுடன் அதிக முறை இயக்கக்கூடிய குறுகிய தூர சரக்கு வழித்தடங்களை கண்டறியும் பணிகளை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இதன் மூலம், சில ஆண்டுகளுக்கு முன் சரக்கு போக்குவரத்தில் தான் இழந்த இடத்தை ரயில்வே துறை மீண்டும் பிடிக்க முற்படுவது தெளிவாகத் தெரிகிறது.
இது குறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே. யாதாவ், "எங்கள் வணிக மேம்பாட்டு பிரிவினர் அதிக போக்குவரத்து திறன் கொண்ட குறுகிய தூர பாதைகளை கண்டறியும் பணிகளை தொடங்கியுள்ளன" என்று தெரிவித்தார்.
ரயில்வே சரக்கு வணிகத்தின் பெரும்பகுதி நிலக்கரி, இரும்பு மற்றும் எஃகு, இரும்பு தாது, சிமென்ட், உணவு தானியங்கள், உரங்கள் உள்ளிட்ட மூலப்பொருள்களை கொண்டு செல்வதிலிருந்து வருகிறது. ஒரு காலத்தில் நாட்டில் சரக்கு இயக்கத்தின் பெரும்பகுதி ரயில்வே கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இப்போது மொத்த சரக்கு வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் ரயில்வே துறையிடம் உள்ளது.
சரக்கு வணிகத்தில் தனது இருப்பை மேம்படுத்துவதற்காக, இந்திய ரயில்வே ஒரு லட்சியத் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதன்படி சரக்கு போக்குவரத்திற்கென்று பிரத்யேகமாக டெல்லி-மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையே ஒரு வழித்தடமும், லூதியானா-கொல்கத்தா நகரங்களுக்கு இடையே மற்றொரு வழித்தடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அடுத்தாண்டில் செயல்பாட்டிற்குவரும் என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இது தவிர, அடுத்த 10 ஆண்டுகளில் மொத்தம் 4,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மேலும் மூன்று சிறப்பு சரக்கு வழித்தடங்களை கட்டவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சரக்கு வழித்தடங்கள் அரசு மற்றும் தனியார் கூட்டு (பிபிபி) முறையில் கட்டப்படும்.
குறுகிய தூர வாணிக போக்குவரத்தை கைப்பற்றுவது மட்டுமின்றி, சில பகுதிகளில் ரோல்-ஆன் மற்றும் ரோல்-ஆஃப் (RO-RO) சேவையையும் வழங்க ரயில்வே துறை திட்டமிட்டுவருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், கடைசிகட்ட சரக்கு போக்குவரத்திற்கு மட்டும் லாரிகள் பயன்படுத்தப்படும். முழு லாரிகளும் திறந்த ரயில்களில் ஏற்றப்பட்டு பெரும்பான்மையான தூரம் எடுத்துச் செல்லப்படும்.
இந்த முறை ஏற்கனவே அமலில் இருந்தாலும் இதை பெரும்பாலானோர் பயன்படுத்த விரும்புதில்லை. இதற்கு முக்கிய காரணம், தற்போதைய சரக்கு கணக்கிடப்படும் முறையில், சரக்குகளின் எடையுடன் லாரிகளின் எடையும் சேர்த்துக் கணக்கிடப்படுகிறது. இவ்வாறு கணக்கிடப்படுவதால் லாரி ஓட்டுநர்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது.
இதன் காரணமாக புதிய முறை ஒன்றை உருவாக்கும் பணிகளிலும் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.
இது குறித்து வி.கே. யாதவ் கூறுகையில், “இந்த முறையை மாற்றுவது குறித்து ஆலோசித்துவருகிறோம். இதற்காக லாரி உரிமையாளர்களுடன் பேசிவருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் யாரும் செல்ல விரும்பாத 'மோடி' குகை!