இந்தியர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையிலும் இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு எதிராகவும் செயல்படுவதாகக் கூறி 59 சீனச் செயலிகளுக்கு மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று (ஜூன் 29) தடைவிதித்தது.
இச்சூழலில் அனைத்துச் சீனச் செயலிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். ஆனால், அது உண்மை அல்ல. இந்தியர்களின் தரவுகளையும் இந்தியர்களின் தனியுரிமையும் பாதிக்கும் வகையில் செயல்பட்ட செயலிகளுக்கு மட்டுமே தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையிலிருந்து தப்பிய சில முக்கிய சீனச் செயலிகள்
- PUBG Mobile
- MV Master
- AliExpress
- TurboVPN
- App Lock by DoMobile,
- Rozz Buzz we media
- 360 Security
- Nono live
- Game of Sultans
- Mafia City
இந்தச் சீனச் செயலிகள் தடையிலிருந்து தப்பியதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தற்போது தடைசெய்யப்பட்டுள்ள சீனச் செயலிகளைப் போல இவை இந்தியர்களின் தரவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் இருந்திருக்கலாம். இருப்பினும், இந்தச் செயலிகள் குறித்து மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, வரும் காலத்தில் இந்தச் செயலிகள் தடை செய்யப்படலாம்.
தடையிலிருந்து பப்ஜி தப்ப காரணம் என்ன?
பப்ஜி கேமில் எதாவது பிரச்னை இருக்குமா என்பது குறித்து உளவுத் துறை பரிசோதனை செய்திருக்கலாம். இறுதியில், பப்ஜி செயலி எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று அவர்கள் முடிவெடுத்திருக்கலாம். மேலும், பப்ஜி முற்றிலும் சீனர்களால் தயாரிக்கப்பட்டது இல்லை என்பதாலும் அவை தடையிலிருந்து தப்பியிருக்கலாம்.
பப்ஜி விளையாட்டு தென் கொரியாவின் புளூஹோல் என்று நிறுவனம் உருவாக்கியது. பப்ஜி ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, சீன நிறுவனமான டென்சென்ட், சீனாவில் பப்ஜி விளையாட்டைச் சந்தைப்படுத்த புளூஹோல் நிறுவனத்துடன் கைகோர்த்தது.
இந்தியாவிலும் இந்த விளையாட்டை டென்சென்ட் நிறுவனம்தான் விநியோகிக்கிறது. பப்ஜி விளையாட்டுக்கும் சீன நிறுவனங்களும் வலுவான தொடர்பு உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றாலும், இது முழுக்க முழுக்க சீன நிறுவனத்தின் செயலி இல்லை என்பதால் தடையிலிருந்து தப்பியிருக்கலாம்.
தடைசெய்யப்பட்ட செயலிகள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால் அவற்றின் நிலை என்ன?
மத்திய அரசின் உத்தரவைப் பெற்றவுடன் கூகுள் (ஆண்ட்ராய்டு) மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள், தடைசெய்யப்பட்ட 59 செயலிகளையும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் iOS ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கிவிடும். இன்று காலை, இந்தியாவின் இரு ஆப் ஸ்டோர்களிலிருந்தும் டிக்டாக் அகற்றப்பட்டது.
மேலும், இந்தச் செயலிகளுடனான அனைத்துத் தரவுப் போக்குவரத்தையும் தடுக்க அரசு, ஏற்கனவே இந்திய இணைய சேவையை வழங்கும் Indian internet service providers என்ற அமைப்புடனும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் telecom service providers என்ற அமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் நல்ல விதமாக முடியும்பட்சத்தில், இந்தச் செயலிகள் இந்தியாவில் முற்றிலும் செயல்படாது.
இந்தியாவில் இருக்கும் சியோமி ஸ்மார்ட்போன்களின் நிலை என்ன?
Mi community, Mi video call உள்ளிட்ட செயலிகளை அரசு தடை செய்திருந்தாலும், Mi பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் சேவைகள் மற்றும் அத்தியாவசியச் செயலிகள் குறித்து தற்போது கவலைப்பட தேவையில்லை.
சீனச் செயலிகளின் ஆதிக்கம்
ஸ்மார்ட்போன்களில் சீனச் செயலிகளின் ஊடுருவல் என்பது கடந்த சில ஆண்டுகளாகவே மிகப் பெரிய அளவு அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட 100 செயலிகள் 18 சீனச் செயலிகள் மட்டுமே இருந்தன. ஆனால் 2018ஆம் ஆண்டில், அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட 100 செயலிகளில் இருக்கும் சீனச் செயலிகளின் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ’இந்தியாவின் செயல் கவலையளிக்கிறது’ - 59 செயலிகள் தடை செய்யப்பட்டது குறித்து சீனா!