சர்வதேச அளவில் கோவிட்-19 தொற்று அச்சம் காரணமாக பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை எப்போது சீராகும் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மை உள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளனர். இன்று முக்கியமாக நிதித் துறை மற்றும் ஐடி துறை பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 536.86 புள்ளிகள் (1.68%) குறைந்து 31,327.22 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159.5 புள்ளிகள் (1.71%) குறைந்து 9154.4 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.
ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பெரியளவில் சரிவைச் சந்தித்தது. சுமார் ஒன்பது விழுக்காட்டிற்கு மேல் அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. அதைத்தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எம் & எம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் மூன்று விழுக்காடு வரை ஏற்றம் கண்டது. அதேபோல சன் பார்மா, ஹீரோ மோட்டோகார்ப், எல் & டி, பவ்கிரிட், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
சரிவுக்கு காரணம் என்ன?
பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகச் சந்தைகளில் பணப்புழக்கம் இல்லாததால் சில கடன் திட்டங்களை முடிப்பதாக அறிவித்தது. இது உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவுக்கு மற்றொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
நிரந்தர வருமானத்தை எதிர்பார்த்து இதில் முதலீடு செய்தவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பல நாடுகளிலும் பொருளாதாரம் குறித்த தரவுகள் சிறப்பாக இல்லாததும் கச்சா எண்ணை விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்துவருவதும் முதலீட்டாளர்களின் அச்சத்தை அதிகப்படுத்துவதாக அமைந்தது.
சர்வதேச பங்குச்சந்தை
ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவில் நிறைவடைந்தன. ஐரோப்பியப் பங்குச் சந்தைகளும் சரிவிலேயே வர்த்கமாகிவருகின்றன.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 0.38 விழுக்காடு குறைந்து 21.25 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகிவருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்துவருகிறது. இன்று மேலும் 40 பைசா சரிந்து டாலருக்கு எதிராக 76.46 ரூபாய்க்கு வர்த்தகமாகியது.
இதையும் படிங்க: இந்தியாவில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 89 விழுக்காடு சரிவு!