இன்று காலை சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை, நாள் முழுவதும் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 784 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது. மதியத்திற்குப் பின் படிப்படியாக இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் உயர்ந்தன.
இறுதியில் சென்செக்ஸ் 222.8 புள்ளிகள் (0.73 விழுக்காடு) உயர்ந்து 30,602.61 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67.5 புள்ளிகள் (0.76 விழுக்காடு) உயர்ந்து 8,992.8 புள்ளிகளில் நிறைவடைந்தது.
மத்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி அதிகபட்சமாக ஆறு விழுக்காடு வரை உயர்வைச் சந்தித்தது. அதேபோல, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டைட்டன், எல் அண்ட் டி, எஸ்பிஐ, சன் பார்மா, நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
மறுபுறம், எச்.சி.எல் டெக், கொடாக் வங்கி, டெக் மஹிந்திரா, ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
ரூபாய் மதிப்பு
அதேபோல, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லா அளவுக்கு 43 பைசாக்கள் குறைந்து 76.87 ரூபாயாக வர்த்தகமானது.
சர்வதேசச் சந்தைகள்
சர்வதேச அளவிலும் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கங்களுடனேயே காணப்பட்டன. ஷாங்காய் பங்குச் சந்தை உயர்வைச் சந்தித்தாலும், ஹாங் காங், சியோல் மற்றும் டோக்கிய பங்குச் சந்தைகள் சரிவையே சந்தித்தன.
கச்சா எண்ணெய்
ஒரு பேரல் கச்சா எண்ணெய் 2.28 விழுக்காடு அதிகரித்து 28.32 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: இறுதியில் இந்தியாவுக்கு ஏற்றபடி மாற்றிய யூ-ட்யூப்!