டெல்லி: பிற தொழில்களுக்கு உள்ள கடன் சலுகைகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பொருந்துமா என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.கே. கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், இந்திய ரியல் எஸ்டேட் அமைப்பாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவற்றின் பதிலைக் கோரியுள்ளது.
கடன் தடை கொள்கைக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு உரிமை உண்டா? இல்லையா என்பது குறித்த எந்தத் தகவல்களும் தெளிவாக இல்லை என கிரெடாய் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தது.
உடனுக்குடன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்
ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் குழப்பம் இருப்பதாகவும், அது ரியல் எஸ்டேட் நிறுவனர்களை கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் தெரியவில்லை என்று கிரெடாய் அமைப்புக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.
எனவே, இதுகுறித்து ரிசர்வ் வங்கி விளக்கமளிக்க வேண்டும் என்று கிரெடாய் கோரியது. இதற்கு விளக்கமளிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.