மும்பை: இந்தியாவில் சூழலுக்கு ஏற்ற மின் ஆற்றல் தயாரிப்பு பெரியளவில் வளர்ச்சி அடைந்துவரும் வேளையில், அதில் களமிறங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
இத்துறையில் பிற நிறுவனங்களைப் போலல்லாமல், ஒட்டுமொத்த சூழலுக்கு ஏற்ற மின் சேர்ப்பு உபகரணங்கள், மின் தயாரிப்பு ஆகியவற்றை உருவாக்க சுமார் 60,000 கோடி ரூபாய் முதலீட்டில் மாபெரும் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இந்த முடிவை 44ஆவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அவர் அறிவித்தார். ஜாம்நகர் பகுதியில் ஏற்கனவே கச்சா எண்ணெய் வர்த்தகம் இருக்கும் காரணத்தால், இந்த புதிய திட்டத்தினையும் அங்கேயே செயல்படுத்த முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளார்.
இதற்காக திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் தளத்தை அங்கு உருவாக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. சுமார் 4 தொழிற்சாலைகள் கொண்ட இத்திட்டத்திற்கு 60,000 கோடி ரூபாய் முதலீடு முதல்கட்டமாக செய்யப்பட்டுள்ளது. அவை,
சூரிய மின் தகடுகள் தயாரிக்கும் தொழிற்சாலை
இந்தியாவில் குறைந்த விலையில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தைத் தயாரிக்கும் சோலார் போட்டோவோல்டாயிக் செல்-ஐ தயாரித்து, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா உற்பத்தி செய்யும் 450 ஜிகாவாட் மின்சாரத்தில் ரிலையன்ஸ் 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
மின்சாரத்தைச் சேமிக்கும் பேட்டரி தொழிற்சாலை
இதேபோல் மின்சாரச் சேமிப்புப் பிரிவில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட எலக்ரோ கெமிக்கல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிநவீன பேட்டரியை தயாரித்து ஆட்டோமொபைல் முதல் அனைத்து துறைகளுக்கும் பேட்டரி விநியோகம் செய்வது தான் இலக்கு.
பசுமை ஹைட்ரஜன் வாயு உற்பத்தி செய்யும் எலக்ட்ரோலைசர் தொழிற்சாலை
பசுமை ஹைட்ரஜன் வாயுவை எலக்ட்ரோலைசர் தொழிற்சாலை மூலம் தயாரித்து உள்நாட்டில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளார் முகேஷ் அம்பானி. தற்போது பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தி இயக்கும் வாகனங்களை அறிமுகம் செய்து வருவது இத்திட்ட அறிமுகத்தின் பின்னணி.
ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் ஃபியூல் செல் தயாரிப்பு தொழிற்சாலை
இந்தியாவில் ஐசி (Internal combustion) கொண்ட வாகனங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நீக்கிவிட்டுப் பசுமை வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வண்ணம் ஹைட்ரஜன் பியுயல் செல் உருவாக்குவது தான் இந்த 4 தொழிற்சாலையின் பணி. இதன் மூலம் கார் மட்டும் அல்லாமல் கன ரக வாகனங்களும் இயக்க முடியும்.
அனைத்திற்கும் மேலாக இந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்கள், உதிபாகங்கள் என அனைத்தையும் புதிதாக அமைக்கப்பட உள்ள திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் தளத்திலேயே தயாரிக்கப்பட உள்ளது.
மேலும் இத்திட்டத்தைச் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த ரிலையன்ஸ் நியூ எனர்ஜி கவுன்சில் உருவாக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் இந்திய அறிஞர்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் உள்ள வல்லுநர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், இத்திட்டத்திற்கான பொருட்களை உருவாக்கவும், கூட்டணி வைக்கவும், எதிர்காலத் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி செய்யவும் கூடுதலாக 15000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் அடுத்த மூன்றாண்டுகளில் செய்யவுள்ளதாகவும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.