கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால், பொருளாதார செயல்பாடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. அதனையடுத்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வங்கிக் கடன் தவணை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கு வங்கிக் கடன் தவணை கட்டுவதற்கு ஒத்திவைக்க அனுமதியளிக்கப்பட்டது.
வருகின்ற 31ஆம் தேதி இந்த ஒத்திவைப்பு காலம் முடிவடைய உள்ளதால், வங்கிகளில் கடன் தவணை செலுத்தும் காலம், மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் தொழில்கள், வர்த்தகம் ஆகியவை முடங்கியதால் பொதுமக்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் வங்கிக் கடன் தவணைகளை அவர்களால் செலுத்த முடியாது என்பதால், மேலும் மூன்று மாதங்களுக்கு கடன் தவணைகளை வசூலிக்கவேண்டாம் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்தப் பரிந்துரை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொருளாதார அறிவிப்பின் பலன்களும், பற்றாக்குறையும்