இன்று டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "இந்தப் பெருந்தொற்று காலத்தில் மொபைல் தொழில்நுட்பத்தின் மூலம் தேவைப்படுபவர்களுக்கு பல நன்மைகள் ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டில் மொபைல் தொழில்நுட்பத்தின் உதவியுடனே உலகின் மிகப் பெரிய கரோனா தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் நடைபெறவுள்ளது" என்றார். இருப்பினும், பிரதமர் மோடி இத்திட்டம் எந்த மாதிரி முன்னெடுக்கப்படும் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளவில்லை.
இந்தியாவில் தற்போது ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் தடுப்பு மருந்து, ஃபைஸர் தடுப்பு மருந்து, பாரத் பயோடெக்கின் தடுப்பு மருந்து ஆகியவற்றின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. ஃபைஸர் நிறுவனம் சார்பில் உள்நாட்டில் எவ்வித மருத்துவ சோதனைகளும் நடத்தப்பட்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய மோடி, "எதிர்காலத்தில் கோடிக்கணக்கான இந்தியர்களை மேம்படுத்துவதற்கு சரியான நேரத்தில் அவர்களுக்கு 5ஜி சேவை கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மொபைல் தொழில்நுட்பம் காரணமாகவே, கோடிக்கணக்கான பணமில்லா பரிவர்த்தனைகள் இன்று சாத்தியமாகியுள்ளன. இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: '5ஜி சேவையில் தனித்திருப்பது ஆபத்தானது' - அம்பானிக்கு ஏர்டெல் பதிலடி