திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக இருக்கலாம், ஆனால் அவை இந்த உலகத்தில்தான் வாழப்பட வேண்டும். கரோனா தொற்றும் இந்த பூமியில்தான் உள்ளது. புதிய இயல்புநிலையில் தனி மனித இடைவெளி என்பது கட்டாயமாகிவிட்டது. இந்த நெருக்கடியான வரையறுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு சிக்கல்கள் புதிதாக ஏற்படுகின்றன.

எனவே, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ, அன்பைத் தவிர வேறு சில முக்கிய நிதி விவகாரங்களிலும் நாம் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். வங்கி கணக்கு விவரங்கள் முதல் புத்திசாலித்தனமான முதலீடுகள் வரை, வாழ்க்கையில் இணை இருவரின் நிதி நிலைமையை மதிப்பிடுவதிலிருந்து அவசர நிதியை அமைப்பது வரை, எதிர்கால மற்றும் நிகழ்கால செலவுகள் குறித்து சிந்திப்பது வரை, அனைத்திற்கும் திட்டமிடல்தான் முக்கியமானது.

தற்போதைய நிதிநிலைமைகளை மதிப்பிடுவது!
பலருக்கும் திருமணத்திற்கு பின் பெரும் அதிர்ச்சியை அளிப்பது இணையர் மேற்கொள்ளும் செலவுகள்தான். எனவே, திருமணத்திற்கு முன்பே இணையரின் நிதிசார்ந்த பழக்கவழக்கங்களை அறிந்துகொள்வது சிறப்பு. இது உங்கள் இணையருக்கு, ஏற்கனவே ஏதேனும் கடன் உள்ளதா என்பது குறித்தும் அவர்களது முதலீடு குறித்தும் அறிந்துகொள்ள உதவும்.

உங்கள் இணையருக்கு கடன் இருப்பினும், அதை திரும்ப செலுத்த எந்த மாதிரியான திட்டத்தை வைத்துள்ளார் என்பது குறித்து முறையாக இருவரும் பேசிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கடனை திரும்பச் செலுத்துவதற்கும் க்ரெடிட் கார்ட் பில்களை திரும்பச் செலுத்துவதற்கும்தான் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வங்கி தொடர்பான தகவல்கள்
திருமணம் ஆகிவிட்டதாலேயே உங்கள் நிதி விவரங்களை நீங்கள் சுயமாக நிர்வகிக்கக் கூடாது என்றில்லை. உங்கள் நிதிக்கு நீங்கள்தான் பொறுப்பு. மேலும், இருவரும் இணைந்து கூட்டாகவும் வங்கிக் கணக்கை தொடங்கலாம், அதன் பின் ஒருங்கிணைந்து முதலீடுகளை மேற்கொள்ளலாம்.
கூட்டாக ஒரு வங்கிக் கணக்கை தொடங்குவது என்பது மற்றவர்களின் நிதிநிலைகளை கண்காணிக்க உதவும். அதேபோல, வீடுகளுக்கு ஆகும் செலவுகளை பொறுப்பான முறையில் பகிர்ந்துகொள்ளவும் இது உதவியாக இருக்கும். வரும்காலங்களில் நிதிசார்ந்த மோதல்கள் ஏற்படாமல் இருக்க திருமணத்திற்கு முன் கூட்டாக ஒரு வங்கிக்கணக்கை தொடங்குவது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
நிதி சார்ந்த இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள்
திருமணம் செய்வதற்கு முன்பே இணையரின் நிதி சார்ந்த இலக்குகள் குறித்து உங்களுக்கு தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். இது உங்களின் இணையரின் நிதிசார்ந்த திட்டமிடல்களை நீங்கள் புரிந்துகொள்ள உதவும். இதில் அவர்களுக்கு தேவையான முதலீடுகளையும் நீங்கள் மேற்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஐந்து ஆண்டுகளில் ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்று திட்டமிடலாம். உங்கள் இணையர் அடுத்த ஏழு ஆண்டுகளில் ஐரோப்பா செல்ல திட்டமிடலாம். இவை குறித்து இருவரும் அவ்வப்போது ஆலோசித்துக்கொண்டால், நிலைமைக்கு ஏற்றவாறு நிதி ஒதுக்கீடு செய்துகொள்ளலாம்.
அவசரகால நிதியை ஏற்படுத்தவும்
திருமணத்திற்கு முன்னரே அவசரகால நிதி குறித்து சிந்தித்து தெளிவாக முடிவெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிதி வேலையின்மை, மருத்துவ செலவுகள், விபத்து உள்ளிட்ட அதிமுக்கிய காலங்களில் பயன்படும். ஒருவர் அவசரகால நிதியாக குறைந்தபட்சம் ஆறு மாத கால ஊதியத்தை சேமித்து வைத்திருக்க வேண்டும்.

சரியான முதலீட்டை கண்டறியவும்
திருமணமான ஜோடிகள் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் முக்கிய கேள்வி, சேமிப்பை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான். முதலீடு செய்யப்போகும் அளவு, எவ்வளவு ரிஸ்க் எடுக்கப்போகிறீர்கள் உள்ளிட்டவற்றைப் பொறுத்து பிபிஎஃப், காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யலாம். இருப்பினும், இரண்டு பேரின் நிதிநிலைகளையும் கருத்தில் கொண்டு இதுகுறித்த முடிவெடுக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு டிவி அல்லது எலக்ட்ரானிக் பொருளை வாங்குவது என்பது குறுகிய கால இலக்காக இருக்கலாம். அதேபோல் கார் வாங்குவது, ஓய்வு காலம் குறித்து முடிவெடுப்பது, குழந்தைகளின் திருமணம் குறித்து சிந்திப்பது ஆகியவை தொலைதூர இலக்காக இருக்கலாம். இவை அனைத்தையும் பொறுத்து உங்கள் முதலீடு இருக்க வேண்டும்.

தொடர்ச்சியான வைப்புத்தொகை (recurring deposits), நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) ஆகியவை பாதுகாப்பான முதலீடுகளாக இருக்கலாம். ஆனால், மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் பங்குகளில் முதலீடு செய்வது என்பது நீண்டகால நோக்கில் அதிக லாபத்தை அளிக்கும்.
நிதிநிலையை யார் நிர்வகிப்பது என்று முடிவு செய்துகொள்ளுங்கள்
இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறீர்கள் என்றால் நிதிநிலையை யார் நிர்வகிப்பது என்று முடிவு செய்துகொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்றால், நீங்கள் வீட்டின் செலவுகளை நிர்வகிக்கலாம், உங்கள் இணையர் இஎம்ஐ தொடர்பான செலவுகளை நிர்வகிக்கலாம்.
உங்களில் ஒருவர் மட்டும் சம்பாதித்தால், அனைத்து வகையான செலவுகளை மற்றொருவர் நிர்வகிக்கலாம். எதிர்காலத்தில் எழும் சிக்கலை தவிர்க்க, செலவுகள் குறித்து முன்னரே முறையாக பேசி முடிவெடுத்துக்கொள்ள வேண்டும்.
காப்பீடு நிறுவனங்களின் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள்
ஒரு குறிப்பிட்ட கால காப்பீட்டுத் திட்டம் என்பது ஒரு வகையான ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்களுக்கு நிதி பாதுகாப்பு அளிக்கிறது. இதில் அதிக கவரேஜுக்கு நீங்கள் குறைந்த ப்ரீமியத்தை செலுத்த வேண்டும்.

இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் பாலிசிதாரர் இறந்தால், காப்பீட்டு நிறுவனம் பரிந்துரைக்கப்பட்டவருக்கு (nominee) ஒரு பெரிய தொகையை அளிக்கும். உதாரணமாக, 25 வயதுடைய ஒரு ஆணுக்கு ஒரு கோடி கவரேஜ் கொண்ட காப்பீட்டுத் திட்டத்திற்கான ப்ரீமியம் என்பது 930 ரூபாயாக இருக்கும்.
சுகாதார காப்பீட்டை கட்டாயம் பெறுங்கள்
உங்களுக்கும் உங்கள் இணையருக்கும் நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சுகாதார காப்பீட்டை வழங்கியிருந்தாலும், நீங்கள் தனியாக ஒரு சுகாதார காப்பீட்டு பாலிசியை பெற வேண்டும். ஏனென்றால், நீங்கள் அந்த வேலையை விட்டு வெளியேறினால், அதன் பிறகு சுகாதார காப்பீடு கவர் ஆகாது.

அதிகரித்துவரும் மருத்துவ செலவுகள் மற்றும் பணவீக்கம் காரணமாக அனைவரும் நிச்சமாக மருத்துவ காப்பீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். Family Floater Health Insurance திட்டத்தை பெற்றால் அது உங்களையும் உங்கள் இணையரையும் உங்கள் பெற்றோரையும் பாதுகாக்கும்.
மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் முழுக்க முழுக்க ஆசிரியரின் கருத்துக்களே, ஈடிவி பாரத் அல்லது அதன் நிர்வாகத்தின் கருத்துக்கள் அல்ல!
இதையும் படிங்க: கரோனா செலவுகளுக்கு மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?