கோவிட்-19 பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாகப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வயதானவர்களும் மாற்றுத்திறனாளிகளும் கரோனா தொற்று காரணமாகப் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் புதியதொரு திட்டத்தை பேடிஎம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பேடிஎம் வங்கியில் சேமிப்புக் கணக்கை வைத்திருக்கும் மூத்தக் குடிமகன்களும் மாற்றுத் திறனாளிகளும் தங்களுக்குத் தேவையான பணம் பெற 'Cash at Home' என்ற டேப்பில் வேண்டுகோள் விடுக்கலாம்.
இது குறித்து பேடிஎம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்த, அடுத்த இரண்டு நாள்களில் பணம் அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரில் அளிக்கப்படும். இந்த வசதியைப் பயன்படுத்தி ரூ.1000 முதல் ரூ.5000 வரையிலான பணத்தை எடுக்கலாம். முதல்கட்டமாக இத்திட்டம் தலைநகர் டெல்லியில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 400க்கும் மேற்பட்ட அரசு மானியங்களைப் பொதுமக்கள் Direct Benefits Transfer வாயிலாக தங்கள் வங்கிக் கணக்கில் பெறும் வசதியை சில மாதங்களுக்கு முன் பேடிஎம் அறிமுகம் செய்திருந்தது.
பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார் குப்தா, "நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் வங்கி சேவையை நாட்டில் தொடர்ந்து விரிவுபடுத்துவோம். எங்களின் புதிய 'Cash at Home' திட்டத்தின் மூலம் வயதானவர்களும் உடல்நலமற்றவர்களும் எளிதில் தங்களுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்" என்றார்.
இதையும் படிங்க: மூன்று மடங்கு அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணம்