டெல்லி: சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒப்போ நிறுவனத்தின் 5ஜி கண்டுபிடிப்பு ஆய்வகத்தின் மூலம் புதிய ஆறு 5ஜி தகவல் சாதனங்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது முதல் 5ஜி கண்டுபிடிப்பு ஆய்வகத்தை நிறுவியுள்ளது. இதன்மூலம் உருவாக்கப்படும் தயாரிப்புகளை உலகளவில் சந்தைப்படுத்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
ஒரே சீன நிறுவனம் பல பெயர்களில் இந்திய கைப்பேசி சந்தையை ஆட்கொண்டு வருவது உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவில் இந்த ஆய்வகத்தின் மூலம் 6 புதிய 5ஜி தொழில்நுட்ப தகவல் சாதனங்கள், இந்த ஆண்டில் வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட் கைப்பேசியான ரெனோ5 புரோ 5ஜி, என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் இயர்ஃபோனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒப்போ நிறுவனம் மிகுந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது எனவும், 2020 மூன்றாம் காலாண்டில் 50 விழுக்காடு வளர்ச்சியை நிறுவனம் பதிவுசெய்துள்ளதாகவும் ஒப்போ ஆராய்ச்சி குழுவின் தலைவர் தஸ்லீம் ஆரிஃப் தெரிவித்துள்ளார்.
களமிறங்கிய ஒப்போ ரெனோ 5 - சிறப்பம்சங்கள் என்னென்ன!
இந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட் கைப்பேசியான ரெனோ5 புரோ 5ஜி, இந்தியாவின் நொய்டா தொழிற்சாலையில் முற்றிலுமாக உருவாக்கப்பட்டதாகும். மேலும், இந்த தொழிற்சாலையில் வருடம் ஒன்றுக்கு 5 கோடி கைப்பேசிகளை உருவாக்க முடியும் என்பது நிறுவனத்தின் கூற்றாகும்.
இதுவரையில் 20 நாடுகளில் தங்கள் கைப்பேசிகளுக்கான 5ஜி உரிமத்தை ஒப்போ நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.