இந்தியாவில் கோவட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளது. ஏற்கனவே ஆட்டம் கண்டுவந்த ஆட்டோமொபைல் துறை இந்த ஊரடங்கால் பெரிய அடியைச் சந்தித்தது.
இந்நிலையில், மாருதி சுசூகி நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் ஆர்.சி. பார்கவா வீடியோ கான்பரன்சிங் முறையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இப்போதுள்ள சூழ்நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு அனைத்து வாகன உற்பத்தியும் பெருமளவு குறையும். எனவே இந்த தருணத்தில் ஜிஎஸ்டி குறைப்பைக் கேட்பது எந்தவொரு பலனும் தராது.
வாகன உற்பத்தி அனைத்தும் தொடங்கப்பட்டு, தேவைக்கு அதிகப்படியாக வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் போது மட்டுமே ஜிஎஸ்டி குறைப்பு என்பது சரியானதாக இருக்கும். எனவே அரசும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி குறைப்பை மேற்கொள்ள எது சரியான தருணம் என்று தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக இப்போது அது தேவையில்லை" என்றார்.
நாட்டின் மொத்த வாகன சந்தையில் சுமார் 54 விழுக்காட்டை மாருதி சுசூகி நிறுவனம் தன் வசம் வைத்திருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மன்னராக வலம்வந்த மாருதி சுசூகி நிறுவனம் மார்ச் மாதம் ஒரு காரை கூட விற்கவில்லை என்று அறிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: யெஸ் வங்கி முறைகேடு: அமலாக்கத் துறை வளையத்தில் வதாவன் சகோதர்கள்