இந்தியாவில் கோவிட்-19 பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக இந்தியப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் ஐடிஎஃப்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற இணைய கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாகப் பங்கேற்ற பொருளாதார வல்லுநர் எஸ்தர் டஃப்லோ, பணத்தை ஏழைகளுக்கு நேரடியாக வழங்குவது என்பது தற்போதைய நிலையில் தார்மீக தேவை மட்டுமல்ல பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அதுதான் சிறந்த வழி என்றார்.
அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகத்தில் எஸ்தர் டஃப்லோ பேராசிரியராக பணியாற்றிவருகிறார். தனது கணவர் அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து பொருளாதாரத் துறையில் ஆற்றிய பணிகளுக்காக இவருக்கு 2019ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கோவிட்-19 பரவலுக்குப் பின் தனிநபர் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்துப் பல பொருளாதார நிபுணர்களும் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு 1.7 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை அறிவித்துள்ள போதும், அதில் ஏழைகளுக்கு நேரடியாக வழங்குவது குறித்து எந்தத் திட்டமும் இடம் பெறவில்லை.
இணையக் கருத்தரங்கில் எஸ்தர் டஃப்லோ கூறுகையில், "இவ்வாறு ஏழைகளுக்கு நேரடியாகப் பணம் வழங்குவதைப் பெருநிறுவனங்கள் தங்கள் சொந்த நலனுக்குக்காக்க அரசுகளிடம் வலியுறுத்த வேண்டும்.
சமூகத்தில் பணப் புழக்கம் சீராக உள்ளதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதுதான் தொழில்துறையினருக்குத் தேவை. இப்படிச் செய்வது தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் தார்மீக தேவை மட்டுமல்ல பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அதுதான் சிறந்த வழி.
குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். அரசு இதைக் கவனமாகக் கையாள வேண்டும். இவர்களால் கிராமங்களில் கரோனா பரவல் ஏற்பட்டுவிடக் கூடாது.
கல்வி நிறுவனங்கள் தங்கள் வகுப்புகளைத் தொடங்க அவசரம் காட்டக்கூடாது. இதுவரை நடத்தியுள்ள பாடங்களை மீண்டும் படிக்க அவர்களுக்கு போதுமான நேரம் வழங்கப்பட வேண்டும். கல்வி முறையை முற்றிலும் மாற்றியமைக்க இது அருமையான வாய்ப்பு" என்றார்.
இதையும் படிங்க: பொருளாதாரத்தில் பதிந்த வரலாற்று மாணவி எஸ்தர் டஃப்லோ!