பல நாடுகள் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் சர்வதேச அளவில் பல்வேறு விமான நிறுவனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவிலும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நாட்டிலுள்ள அனைத்து விமான நிறுவனங்களும் மார்ச் இறுதி வாரத்தில் தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டன.
இதன் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் இந்திய விமான நிறுவனங்கள் சிக்கியுள்ளன. பல நிறுவனங்கள் ஊதிய குறைப்பு, ஆள் குறைப்பு போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட்டின் விமான நடவடிக்கைகள் பிரிவின் தலைவர் குர்ச்சரன் அரோரா பைலட்டுகளுக்கான ஊதியம் குறித்து மின்னஞ்சல் ஒன்றை அனைத்து பைலட்களுக்கும் அனுப்பியுள்ளார்.
அதில், "தற்போது 16 விழுக்காடு விமானங்களும் 20 விழுக்காடு பைலட்டுகளும் மட்டும் செயல்படுகின்றனர்.
தற்போது ஐந்து சரக்கு விமானங்களை நாங்கள் இயக்கிவருகிறோம். பயணிகள் விமானத்திலும் சரக்குகளை எடுத்துச் செல்கிறோம். ஏப்ரல், மே மாதங்களில் விமான பைலட்டுகளுக்கு மாத ஊதியம் கிடைக்காது. அதற்குப் பதில் பைலட்டுகள் எவ்வளவு நேரம் சரக்கு விமானத்தை இயக்கினார்களோ அதைப் பொறுத்து ஊதியம் வழங்கப்படும்.
வரும் காலங்களில் சரக்குகளை எடுத்துச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை 50 விழுக்காடு வரையும் பைலட்களின் எண்ணிக்கையை 100 விழுக்காட்டிற்கும் அதிகரிக்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் - வேலை இழக்கும் ஏர்வேஸ் ஊழியர்கள்