காணொலி காட்சி வாயிலாக பாஜக நிர்வாகிகளிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், கரோனா காரணமாக மக்களிடம் செல்லவும் பேசவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரதமர் மோடியின் முயற்சியால், கிராமத்தில் இணையதள வசதி வந்துள்ளது. இதனால் நமது கருத்தை மக்களிடம் வைக்க முடிகிறது.
தேர்தல் பரப்புரையில் பாஜக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை மத்திய அரசு நிறைவேற்றிவருகிறது. பதவி ஆசை காரணமாக அவசர நிலையை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது வேதனையளிக்கிறது. திமுக தலைவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய காங்கிரஸ் கட்சிக்கு இன்று திமுக ஆதரவு அளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
மூலப்பொருட்கள் உள்நாட்டில் கிடைக்கவில்லை என்றால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், பிள்ளையார் சதுர்த்திக்கு வழிபாடு செய்யப்படும் சிலைகள் கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது ஏன்? எதனால் இந்த நிலை வந்தது...? நம்மால் களிமண்ணில் சிலை செய்ய முடியாதா...?
வீட்டில் பயன்படுத்தும் தினசரி பொருட்களான சோப்பு டப்பா முதல் ஊதுபத்தி வரை இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதே ‘ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அவர் பேசினார்.