கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டுக்கான மொத்த நேரடி வரி வருவாய் 13 விழுக்காடு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரிவின் காரணங்கள்
கடந்தாண்டு, ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 17 வரையிலான காலகட்டத்தில் 6.80 லட்சம் கோடி ரூபாய் மொத்த நேரடி வரி வருவாயாக ஈட்டப்பட்டது. இந்தாண்டு, 13 விழுக்காடு குறைந்து 5.87 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. வரியை செலுத்துவற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மொத்த வரி வருவாய் குறைந்துள்ளது.
வரியின் மூன்றாம் தவணை செலுத்துவதற்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 3.04 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி வருவாயாக இந்தாண்டு ஈட்டப்பட்டுள்ளது. 2.70 லட்சம் கோடி ரூபாய் தனிநபர் வருமான வரியாக ஈட்டப்பட்டுள்ளது.
மொத்த நேரடி வரி வருவாய் - சரிவை கண்ட சென்னை
டெல்லியில் மொத்த நேரடி வரி வருவாய் 22 விழுக்காடு குறைந்துள்ள நிலையில், மும்பையில் 8.4 விழுக்காடும் சென்னையில் 22.4 விழுக்காடும் குறைந்துள்ளது. இதற்கு நேரெதிராக பெங்களூருவில் 4.2 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. அதேுபோல், ஜிஎஸ்டி வரிவருவாயும் ஏற்றம் கண்டுள்ளது.