கரோனா லாக்டவுன் காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு, சந்தை விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதை சீரமைக்க மத்திய அரசு வெளியிட்ட தற்சார்பு இந்தியா பொருளாதார அறிவிப்பில், சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி கடன் வழங்க பிரத்யேக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த கடன் அறிவிப்பு துறையில் எதிர்பார்த்த ஈர்ப்பையும் தாக்கதையும் ஏற்படுத்தவில்லை என சிறு, குறு நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் அனிமேஷ் சக்சேனா தெரவித்துள்ளார். ஈடிவி பாரத் செய்தியாளர் கிருஷ்ணானந்த் திரிபாதியுடன் மேற்கொண்ட பிரத்யேக உரையாடலில் அனிமேஷ் சக்சேனா பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
அதில், "நாடு முழுவதும் சுமார் 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சிறு, குறு தொழில்துறை நாட்டின் பொருளாதார எழுச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது. அண்மையில் கரோனா லாக்டவுன் அறிவிப்பால் வேலை முடக்கம் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசு அறிவுறுத்தலின்படி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இது முடங்கியுள்ள துறைக்கு கூடுதல் சுமையை அதிகரித்துள்ளது.
இரண்டு மாத கால முடக்கத்தால் சம்பளம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் தொழில் நிறுவனங்கள் தவித்துவருகின்றன. வங்கிக் கடன் வழங்குவது தொடர்பாகவும் சில சிக்கல்கள் உள்ளன. அதன்படி, நிறுவனங்கள் கடன் பெறுவதில் பல நேரடி மறைமுகத் தடைகள் உள்ளன. குறிப்பாக, நிறுவனத்தின் முந்தைய வரவு செலவு விவரம், இருப்புநிலையை வைத்தே கடன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான வரைவுகள் தெளிவாக இல்லை. அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிறு நிறுவன அமைப்பின் தலைவர் சந்தரகாந்த் சலுன்கே பேசுகையில், "பெரும்பாலான சிறு நிறுவனங்கள் வங்கிக் கடனைச் சார்ந்து இயங்குவது இல்லை. நேரடியான பணப்புழக்கம் சார்ந்த நிதி பரிவர்த்தனையிலேயே அவை ஈடுபடுகின்றன. எனவே, மத்திய அரசு சிறு நிறுவனங்களின் களச்சூழலைப் புரிந்து அதற்கேற்ப செயல்படுவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'குடிபெயர் தொழிலாளர்களுக்கு தானியம் மட்டுமல்ல, பணமும் தேவை'